பாகிஸ்தானுக்கு எதிராக ஆப்ரேஷன் சிந்தூர் என்ற தீர்க்கமான நடவடிக்கையை எடுத்த மத்திய அரசுக்கும், இந்திய ராணுவத்துக்கு ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பஹல்காம் தாக்குதலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை இது என்றும் இந்த நடவடிக்கையால் நாட்டின் சுயமரியாதையும், மன உறுதியும் மேம்பட்டுள்ளது என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீதான ராணுவ நடவடிக்கை நம் நாட்டின் பாதுகாப்பிற்கு அவசியமானது, தவிர்க்க முடியாதது என்று கூறியவர், இந்த நெருக்கடியான நேரத்தில் ஒட்டு மொத்த நாடும் ராணுவத்துக்கு உறுதுணையாக நிற்கும் என்று மோகன் பகவத் உறுதிபட தெரிவித்துள்ளார்.
எல்லையில் வசிக்கும் பொதுமக்கள் மீது பாகிஸ்தான் நடத்தும் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மோகன் பகவத் இந்த சவாலான நேரத்தில் அரசின் அறிவுறுத்தல்களை நாட்டு மக்கள் பின்பற்ற வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
“சமூக ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை சீர்குலைக்க தேச விரோத சக்திகள் மேற்கொள்ளும் சதி திட்டங்கள் வெற்றி பெற அனுமதிக்க கூடாது என மோகன் பகவத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.