இந்தியா – பாகிஸ்தான் இடையிலான அணு ஆயுதப் போரை நிறுத்தி விட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வாஷிங்டனில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர்,
இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தப்பட்டதற்கு அமெரிக்காதான் முக்கியக் காரணம் என்று கூறினார்.
இரு நாடுகள் இடையே நடைபெறவிருந்த மிகப்பெரிய அணு ஆயுதப் போரை அமெரிக்கா நிறுத்தி விட்டதாகக் கூறிய அவர், போரை நிறுத்த உதவிய துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், வெளியுறவு அமைச்சர் ரூபியோ ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு வர்த்தகம் உள்பட நிறைய உதவிகளை செய்ததாகக் கூறிய அவர், போரை நிறுத்தாவிட்டால் இரு நாடுகளுடன் அமெரிக்கா வர்த்தகம் செய்யாது என எச்சரித்ததாகவும் தெரிவித்தார்.
வர்த்தகத்தை தன்னைப் போல யாரும் பயன்படுத்தியதில்லை என்றும் பெருமிதம் தெரிவித்துக் கொண்ட அவர், இந்தியாவுடன் வர்த்தகப் பேச்சு நடைபெற்று வருவதாகக் கூறினார்.
பாகிஸ்தானுடன் வர்த்தகம் தொடர்பான நடவடிக்கைகள் அதிகரிக்கப்படும் என்று கூறிய ட்ரம்ப், அதுதொடர்பான பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும் என்றும் தெரிவித்தார்.