காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சசி தரூர், பஹல்காம் தாக்குதல் நடந்த நாளிலிருந்தே, சமூக ஊடகங்கள் மூலமாகவும், தேசிய மற்றும் சர்வதேச பத்திரிகைகளுடனான நேர்காணல்கள் மூலமாகவும் தேச நலனுக்காக இடைவிடாமல் பேசி வருகிறார். ஒவ்வொரு பேட்டியிலும், தேசம் முதலில் என்ற பிரதமர் மோடியின் கொள்கையை உரக்கச் சொல்லி வருகிறார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
ஒரு சுவாரஸ்யமான அரசியல்வாதியான சசி தரூர், தன் கருத்துகள் மற்றும் நடவடிக்கைகள் மூலம் தன் அரசியல் எதிரிகளைக் கூட ஆச்சரியப் படுத்தி விடுவார். ஆச்சரியப்படுத்த எதுவும் இல்லாத போதும் கூட, முன்பு எப்போதுமே கேட்டறிந்திராத புதிய ஆங்கில வார்த்தைகளைக் கூறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி விடுவார்.
ராகுல் காந்தியின் அரசியல் போக்கை எதிர்த்த ஜி-23 தலைவர்களுள் ஒருவரான சசி தரூர், பிறகு ராகுலின் ‘பாரத் ஜோடோ’ யாத்திரையில் பங்கேற்று, ஆச்சரியப் படுத்தினார். ஜெயிப்போமா தோற்போமா என்பதையும் கடந்து காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டுத் தோற்றார்.
1700 ஆம் ஆண்டில் 27 சதவீத ஜிடிபியுடன் இருந்த உலகின் பணக்கார நாடுகளுள் ஒன்றான இந்தியாவைக் கைப்பற்றி, அனைத்து செல்வங்களையும் சுரண்டி, இந்தியாவை ஏழை நாடாக ஆக்கியதற்காக ஆங்கிலேயரிடம் இருந்து இழப்பீடு கோரி, சசி தரூரின் விவாத காணொளி இன்றும் வைரலாகி வருகிறது.
நாடாளுமன்றத்தை முடக்கும் காங்கிரசின் திட்டம் குறித்து, விமர்சனம் செய்த சசிதரூர், தூய்மை இந்தியா திட்டத்துக்காகப் பிரதமர் மோடியைப் பாராட்டி இருந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு, பாலஸ்தீன ஒற்றுமை பேரணியில் பங்கேற்ற சசிதரூர், ஹமாஸை பயங்கரவாதிகள் என்பதை ஆதாரங்களுடன் எடுத்துச் சொன்னார்.
இப்படி,வாய்ப்பு கிடைக்கும்போது,உண்மைக்கு ஆதரவாகத் தனது கருத்தை முன்வைக்க சசி தரூர் தவறியதில்லை. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர் நிறுத்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, சமூக ஊடகங்களில் ட்ரோலிங் சப்ஜெக்ட்டாக மாறினார். மிஸ்ரியின் தேசபக்தியைக் கேள்விக்குள்ளாக்குவது முதல் அவரது குடும்பத்தைப் பற்றிய தனிப்பட்ட தகவல்களை வெளியிடுவது வரை நெட்டில் தாக்குதல்கள் நடந்தன.
அப்போது, ஒரு நேர்காணலில் பேசிய சசி தரூர், மிஸ்ரி மீதான ட்ரோலிங் “அபத்தமானது” என்று கண்டனம் தெரிவித்தார். மேலும், இந்தியா-பாகிஸ்தான் உறவில்,மிகவும் பதட்டமான நேரத்தில், நாட்டின் திறமையான குரலாக மிஸ்ரி செயல்பட்ட விதத்தைப் பாராட்டினார்.
முன்னதாக சவூதி அரேபியா அரசுக்குச் சொந்தமான தொலைக்காட்சியில் பேட்டியளித்த சசிதரூர், காஷ்மீரைக் கைப்பற்றுவதற்காகக் கடந்த 30 ஆண்டுகளாக இந்தியாவுக்கு எதிராகப் பயங்கரவாதிகளைப் பாகிஸ்தான் குவித்துக் கொண்டு தான் வருவதாகத் தெரிவித்தார். மேலும், இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும் காஷ்மீரைக் கைப்பற்றும் பாகிஸ்தானின் எண்ணம் தோல்வியில் தான் முடியும் என்று உறுதியாகக் கூறியுள்ளார்.
மேலும், இது நாள் வரை பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறித் தாக்குதல்கள் நடத்திக் கொண்டிருக்கும் போதும், இந்தியா பொறுமையாகத்தான் இருந்தது. போரை இந்தியா விரும்பவில்லை. ஒருவேளை பாகிஸ்தான் போரை விரும்பினால், அதற்கும் இந்தியா தயாராகத் தான் உள்ளது. இருநாடுகளிடையேயான போர் பதற்றத்தைத் தவிர்க்கும் பொறுப்பு பாகிஸ்தானிடம் தான் உள்ளது என்று சசிதரூர் குறிப்பிட்டுள்ளார்.
இருநாடுகளுக்கு இடையிலான போர் நிறுத்த முடிவு, மூன்றாவது நாடான அமெரிக்காவுக்கு எப்படித் தெரிந்தது என்று மக்களவை எதிர் அக்கட்சித் தலைவரும் காங்கிரஸ் கட்சித் தலைவருமான ராகுல் காந்தி உட்பட மற்ற மற்றும் பல்வேறு எதிர்க்கட்சியினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில்,காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரான சசி தரூர், நாடுகளுக்கு இடையேயான தூதரக தொடர்பு ஒருபோதும் மத்தியஸ்த வேண்டுகோளாகக் கருத முடியாது என்று தெளிவு படுத்தியுள்ளார். மேலும், தலையில் துப்பாக்கியை வைக்கும் பயங்கரவாதிகளிடம் இந்தியா ஒருபோதும் பேச்சுவார்த்தை நடத்தாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 26 இந்தியர்களை இந்து என்று உறுதி செய்தபின் கொன்றுள்ளனர், ஆப்ரேஷன் சிந்தூர், நாட்டின் தற்காப்புக்காக மட்டுமே எடுக்கப் பட்டது என்று சசிதரூர் தெளிவுபடுத்தியுள்ளார்.
எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் சஷி தரூர், மத்திய அரசுக்குத் தேவையான செய்தித் தொடர்பாளராகச் சரியான நேரத்தில் சரியான கருத்தை,அனைத்து ஊடகங்களிலும் முன்வைத்து வருவதாக நெட்டிசன்கள் பாராட்டி வருகிறார்கள்.