இந்தியா – பாகிஸ்தான் இடையே அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள நிலையில், இரு நாட்டு ராணுவமும் தங்களிடம் சிக்கிய ராணுவத்தினரை பரஸ்பரம் ஒப்படைத்துக்கொண்டனர்.
பீகார் மாநிலத்தின் பாட்னா பகுதியைச் சேர்ந்த பிஎஸ்எஃப் உதவி ஆய்வாளர் பூர்ணம் குமார் சாஹு, பஞ்சாபின் ஃபெரோஸ்பூரில் உள்ள பாகிஸ்தான் எல்லையில் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது தவறுதலாக எல்லை தாண்டிச் சென்ற அவரை பாகிஸ்தான் ராணுவம் சிறை பிடித்தது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே நிலவிய போர் பதற்றத்தால், பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிய பிஎஸ்எஃப் வீரரின் உயிருக்கு அச்சுறுத்தல் நிலவியது.
இதற்கிடையே கண்கள் கட்டப்பட்ட நிலையில் பாகிஸ்தானிடம் சிக்கிய பிஎஸ்எஃப் வீரர் பூர்ணம் குமார் சாஹுவின் புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் வலுத்து வந்தன.
அதனைத் தொடர்ந்து பேச்சுவார்த்தையின் மூலம் இந்தியா – பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டு, அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளன. அதன் காரணமாக இருநாட்டு ராணுவமும் தங்களிடம் சிக்கிய ராணுவத்தினரை பரஸ்பரம் ஒப்படைத்துக்கொண்டனர்.
அதன்படி, பாகிஸ்தான் பிடியில் இருந்த பிஎஸ்எஃப் வீரர் பூர்ணம் குமார் சாஹு இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டார். இது தொடர்பான வீடியோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது.