தமிழக ஆளுநர் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்திடம் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு விளக்கம் கேட்டுள்ளார்.
மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பது தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்நிலையில், தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி உச்சநீதிமன்றத்திடம் குடியரசுத் தலைவர் விளக்கம் கேட்டுள்ளார். மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநருக்கு காலவரம்பு நிர்ணயிக்க முடியுமா எனவும், அரசியல்சாசன பிரிவு 142-ஐ பயன்படுத்தி குடியரசு தலைவர் மற்றும் ஆளுநரின் உத்தரவுகளை எந்த வகையில் மாற்ற முடியும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
உச்சநீதிமன்றத்தின் தனிப்பட்ட அதிகாரத்தை மத்திய அரசுக்கு எதிராக மாநிலங்கள் பயன்படுத்துகின்றனவா எனவும் வினவியுள்ளார். உச்சநீதிமன்றத்தின் தனிப்பட்ட அதிகாரமான அரசியலமைப்பு பிரிவு 142-ஐ நடைமுறை சட்டவிதிகளுக்கு மட்டும் பயன்படுத்த முடியுமா?
அல்லது நடைமுறை விதிகளுக்கு முரண்பாடான உத்தரவுகளை பிறப்பிக்கவும் அதிகாரம் உள்ளதா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டத்தை ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் நடைமுறைபடுத்த முடியுமா என்பன உள்ளிட்ட 14 கேள்விகளுக்கு உச்சநீதிமன்றத்திடம் குடியரசு தலைவர் முர்மு விளக்கம் கேட்டுள்ளார்.