ஆப்ரேஷன் சிந்தூரின் அதிரடி தாக்குதலால் சிதைந்து போன பாகிஸ்தான், நாட்டின் மேற்கு எல்லையில் மட்டும் ஏவுகணை மற்றும் ட்ரோன்களை ஏவித் தாக்குதல் நடத்த முயற்சி மேற்கொண்டது. அதே நேரத்தில் சீனா, துருக்கி, பங்களாதேஷ், மலேசியா மற்றும் இந்தோனேசியா அரசுகளுடன் தொடர்புடைய ஹேக்கர்களுடன் இணைந்து இந்தியா மீது சைபர் தாக்குதல் நடத்த பாகிஸ்தானியர்கள் முயற்சித்துள்ளனர்.
அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய அடியை இந்தியா வழங்கியுள்ளது. இந்த ராணுவ நடவடிக்கையில்,பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத தளங்கள், 21 பயங்கரவாத பயிற்சி முகாம்கள் ஒரேயடியாக அழிக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ஆபரேஷன் சிந்தூரால் நிலைகுலைந்த, பாகிஸ்தான், நாட்டின் மேற்கு எல்லை பகுதிகளில் ஏவிய ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் அனைத்தையும் இந்தியா வானிலேயே இடைமறித்து அழித்தது. இந்தச் சூழலில், இந்தியாவுக்கு எதிரான டிஜிட்டல் தாக்குதலிலும் பாகிஸ்தான் இறங்கியது. DDoS தாக்குதல் மூலம் இந்திய வலைத்தளங்களை ஹேக் செய்ய முயற்சித்தது.
குறிப்பாக, இராணுவம் சார்ந்த பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அவற்றின் MSME விற்பனையாளர்கள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், மின்விநியோக மையங்கள், ரயில்வே மற்றும் விமானத் துறை சார்ந்த நிறுவனங்கள், போக்குவரத்து சேவை நிறுவனங்கள், BSNL உள்ளிட்ட அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்கள், UPI போன்ற நிதி சார்ந்த டிஜிட்டல் தளங்கள், பங்குச் சந்தைகள் மற்றும் நாட்டின் உள்கட்டமைப்பில் முதலீடு செய்துள்ள முக்கிய இந்தியக் கூட்டு நிறுவனங்கள் சைபர் தாக்குதல்களைச் சந்தித்துள்ளன.
பாகிஸ்தான் ஆதரவு ஹேக்கர்கள், தீம்பொருளைப் பயன்படுத்தியதாகவும், ஃபிஷிங் தாக்குதல்களை நடத்தியதாகவும், நிதி, தொலைத்தொடர்பு, எரிசக்தி மற்றும் பொதுச் சேவைகள் போன்ற முக்கியமான துறைகளைக் குறிவைத்து சேவை மறுப்பு மற்றும் GPS ஏமாற்றுதல் ஆகிய நடவடிக்கைகளைத் தொடங்கியதாகவும் கூறப்படுகிறது.
பாகிஸ்தான் தொடர்புடைய ஹேக்கர்கள் இந்திய வலைத்தளங்கள் மீது சுமார் 15 லட்சம் சைபர் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக, மகாராஷ்டிர சைபர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சைபர் தாக்குதல்களில், சீனாவின் ஆதரவுடன் பாகிஸ்தான், துருக்கி, பங்களாதேஷ், மலேசியா மற்றும் இந்தோனேசியா அரசுகளுடன் தொடர்புடைய ஹேக்கர்கள் ஈடுபட்டதாகக் கண்டறியப் பட்டுள்ளன.
கடந்த செவ்வாய் கிழமை, தேசிய நிலக்கரி மேம்பாட்டுக் கழகத்தின் www.centralcoalfields.in என்ற இணைய தளம் சைபர் தாக்குதலைச் சந்தித்துள்ளது. நீங்கள் பாதுகாப்பாக இருப்பதாக நினைத்தீர்கள், ஆனால் நாங்கள் எல்லா இடங்களிலும் இருக்கிறோம்” மற்றும் ‘பாகிஸ்தானின் சைபர் விழித்துக் கொண்டது’ என்று பாகிஸ்தானின் சைபர் தாக்குதலை இந்தியா தகர்த்துள்ளது. எந்த இழப்பும் அல்லது சிதைவும் இல்லாமல், centralcoalfields வெப் சைட் மீட்டெடுக்கப் பட்டுள்ளது.
டிஜிட்டல் தாக்குதல் மூலம் இந்தியாவை முடக்க நினைத்த பாகிஸ்தானின் சைபர் தாக்குதல் முயற்சிகளும் தோல்வியில் முடிந்துள்ளது.