பாகிஸ்தான் அணு ஆயுதம் வைத்திருப்பது குறித்து சர்வதேச அணு ஆயுத முகமை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.
ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை தொடர்ந்து, ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள ராணுவ தலைமை அலுவலகத்தை ராஜ்நாத் சிங் சென்றார். அங்கு இந்திய ராணுவம் தாக்கி அழித்த பாகிஸ்தானின் ஆயுதங்களை பார்வையிட்டார். பின்னர் வீரர்கள் மத்தியில் பேசிய அவர், பாகிஸ்தானுக்கு மறக்க முடியாத பாடம் கற்பிக்கப்பட்டுள்ளது எனவும்,
தீவிரவாதத்தை அழிக்க எந்த எல்லைக்கும் செல்வோம் எனவும் சூளுரைத்தார்.
பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் பயப்படாது என தெளிவுபடுத்திய ராஜ்நாத் சிங், பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானிடம் அணு ஆயுதம் இருப்பது பற்றி உலக நாடுகள் யோசிக்க வேண்டும் என கூறினார்.
பாகிஸ்தான் அணு ஆயுதம் வைத்திருப்பது குறித்து சர்வதேச அணு ஆயுத முகமை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்திய அவர், முரட்டுத்தனமான நாட்டுக்கு அணு ஆயுதம் தேவையா என கேள்வி எழுப்பினார். மேலும், தீவிரவாத ஒழிப்பு மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.