ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, பாகிஸ்தானின் கிரானா மலையில் இருக்கும் அணு ஆயுத தளத்தை இந்தியா தாக்கியதாக வதந்திகள் பரவி வந்தன. இந்நிலையில், சர்வதேச அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான IAEA, பாகிஸ்தானில் உள்ள எந்தவொரு அணுசக்தி நிலையத்திலிருந்தும் கதிர்வீச்சு கசிவுகள் எதுவும் இல்லை என்று கூறியுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடி கொடுத்த இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற ராணுவ நடவடிக்கையை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. 9 பயங்கரவாத தளங்கள், 21 பயங்கரவாத பயிற்சி முகாம்கள் மீது துல்லியமான தாக்குதல்களை நடத்தியதில், 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தானில் உள்ள நூர் கான், ரபிகியூ, முரித், சக்லாலா, ரஹீம் யார் கான், சுக்கூர், சுனியான் ராணுவ தளங்கள் மீதும் பஸ்ரூர் ரேடார் தளம் மற்றும் சியால்கோட் விமான தளம் மீதும் இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்தியாவின் முக்கிய ராணுவ நிலைகள் மற்றும் முக்கிய நகரங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை முடக்கவே இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, பாகிஸ்தானில் தொடர்ந்து நில அதிர்வுகள் ஏற்பட்டன. மே 10ம் தேதி 5.7 ரிக்டர் அளவிலும், 11 ஆம் தேதி 4.0 என்ற ரிக்டர் அளவிலும்,12 ஆம் தேதியும் 4.6 என்ற ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
பூமியில்,10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாகத் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், இதனால் எந்த உயிர்ச் சேதமோ பொருட் சேதமோ ஏற்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
கிரானா மலைகளுக்கு அடியில் நிலத்தடி அணுசக்தி சேமிப்புடன் இணைக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு தாக்குதலை இந்தியா நடத்தியதால் தான் நிலநடுக்கம் மற்றும் அணு ஆயுத கசிவு ஏற்பட்டதாக சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவத் தொடங்கின. அந்தப் பகுதியின் தாக்குதலுக்கு முன்னும், பின்னும் என குறிப்பிட்டு செயற்கைக்கோள் படங்களும் இண்டர்நெட்டில் உலா வருகின்றன.
ஏற்கெனவே, இந்தியாவின் ஏர் மார்ஷல் ஏ.கே.பாரதி, பாகிஸ்தானில் உள்ள கிரானா ஹில்ஸில் உள்ள அணுசக்தி நிலையத்தை இந்திய இராணுவம் குறிவைக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தியிருந்தார்.
இந்நிலையில், சர்வதேச அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான IAEA கிடைத்த தகவல்களின் அடிப்படையில், பாகிஸ்தானில் உள்ள எந்தவொரு அணுசக்தி நிலையத்திலிருந்தும் கதிர்வீச்சு கசிவு இல்லை என்று, அதன் செய்தித் துறை அதிகாரி ( Fredrik Dahl ) பிரெட்ரிக் டால் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, கதிர்வீச்சை ஆராயும் அமெரிக்காவின் வான்வழி அளவீட்டு அமைப்பைச் சேர்ந்த Beechcraft B350 விமானம் பாகிஸ்தானின் வான்வெளியில் பறந்ததாகத் தெரியவந்துள்ளது. இது குறித்து, பாகிஸ்தான் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்றாலும், Flightradar24 போன்ற விமான கண்காணிப்பு வலைத்தளங்கள் இதை உறுதிப் படுத்தியுள்ளன.
அமெரிக்க வெளியுறவுத்துறை முதன்மை துணை செய்தித் தொடர்பாளர் Tommy Pigott டாமி பிகோட், பாகிஸ்தானில் அணுசக்தி கசிவு குறித்த கேள்வியைப் புறக்கணித்துள்ளது மேலும் பல வதந்திகளுக்கு வழி வகுக்கிறது.
முன்னதாக, வெறும் போர் நிறுத்தத்தை மட்டும் ஏற்படுத்தவில்லை, அணு ஆயுத மோதலைத் தவிர்த்துள்ளோம் என்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியிருந்தார். பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் கவாஜா ஆசிப், பாகிஸ்தானின் அணுசக்தி திறனைக் குறிப்பிட்டு, தனது இருப்புக்கு நேரடி அச்சுறுத்தல் ஏற்பட்டால், பாகிஸ்தான் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும்” என்று கூறியிருந்தார்.
அதேபோல், கடந்த ஏப்ரல் மாதம், பாகிஸ்தானின் அணு ஆயுத ஏவுகணைகள் அலங்காரத்துக்காக இல்லை என்றும், அவை இந்தியாவுக்காக மட்டுமே தயாரிக்கப்பட்டவை என்றும் கூறிய பாகிஸ்தான் அமைச்சர் முகமது ஹனிஃப் அப்பாஸி, கௌரி, ஷாஹீன், கஸ்னவி போன்ற அதிநவீன ஏவுகணைகளையும், 130 அணு ஆயுதங்களையும் வைத்திருக்கிறோம் என்று கூறியிருந்தார்.
இதற்காகத் தான், இந்தியாவின் மீது பயங்கரவாத தாக்குதல் நடந்தால், அதற்குச் சரியான பதிலடி கொடுக்கப்படும் என்று கூறிய பிரதமர் மோடி, அணு ஆயுத மிரட்டலை எல்லாம் இந்தியா பொறுத்துக் கொள்ளாது என்று பாகிஸ்தானை எச்சரித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டு, ஜனவரி மாதம், உலகளவில் மொத்தமாக 12,121 அணு ஆயுதங்கள் உள்ளன என்று Stockholm International Peace Research Institute என்னும் SIPRI சிப்ரி மதிப்பீடு செய்துள்ளது. 2023ம் ஆண்டு மட்டும் புதிதாக 60 அணுஆயுதங்கள் தயாரிக்கப் பட்டுள்ளன.
அதில் 9,585 அணு ஆயுதங்கள் ராணுவக் கையிருப்புகளில் வைக்கப்பட்டுள்ளன என்றும், மீதமுள்ள 3,904 அணு ஆயுதங்கள் தற்போது செயல்பாட்டில் உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இரண்டு நாடுகள் சேர்ந்து 8,000-க்கும் மேற்பட்ட அணு ஆயுதங்களை வைத்துள்ளன. இந்தியாவும், பாகிஸ்தானும் தலா 170 அணு ஆயுதங்களை வைத்துள்ளன.
இந்தியாவிடம் பாகிஸ்தானை விட அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட விமானங்கள் அதிகம் உள்ளன. மேலும், இந்தியாவின் கடல் சார்ந்த அணுசக்திப் படை பாகிஸ்தான் கடற்படையை விட மேம்பட்டதாகவும், திறமையானதாகவும் இருக்கிறது. அதற்கு இந்தியாவின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் சான்றாக உள்ளன.
2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், இந்தியாவிடம் சுமார் 680 கிலோ ஆயுதத் தரம் மிக்க புளூட்டோனியம் இருப்பதாக மதிப்பீடு செய்யப்பட்டது. இது தோராயமாக 130 முதல் 210 அணு ஆயுதங்கள் உருவாக்க போதுமான அளவு என்று சர்வதேச பிளவுபடும் பொருட்கள் குழு (International Panel on Fissile Materials) தெரிவித்துள்ளது.
1998 மே மாதம் பொக்ரான் -2 சோதனைக்குப் பிறகு, அப்போதைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் , இந்தியா இப்போது ஒரு அணு ஆயுத நாடு. நமது அணு ஆயுதங்கள் தற்காப்புக்கானவை. அணு ஆயுதங்கள் அல்லது வேறு எந்த வகையிலும் இந்தியாவை இனி யாரும் ‘அச்சுறுத்த’ முடியாது என்று கூறினார்.
தொடர்ந்து, அதே ஆண்டு ஐநா பொதுச் சபையில் உரையாற்றிய அடல் பிஹாரி வாஜ்பாய், இந்தியாவின் அணுசக்தி, ஆக்கிரமிப்பைத் தடுப்பதற்காகவே என்றும், இந்தியா அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்துவதில்லை என்ற கொள்கையைப் பின்பற்றும் என்றும் கூறினார்.
2019ம் ஆண்டில், இந்தியாவின் அணுசக்தி கொள்கை தெளிவாக உள்ளதாகக் கூறிய பிரதமர் மோடி,அணு ஆயுதங்களால் நாட்டை தாக்குபவர்கள் தப்ப முடியாது என்றும், நாட்டின் அணுசக்தி திறன், நாட்டின் இறையாண்மையை உறுதி செய்கிறது என்றும் கூறினார்.
அதே ஆண்டு, மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், நிலைமைக்கு ஏற்ப, அணுசக்தி கொள்கையில் மாற்றம் ஏற்படலாம் என்பதைச் சுட்டிக்காட்டியிருந்தார். அதாவது, அணு ஆயுதங்களை முதலில் பயன்படுத்துவது இல்லை என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது என்றும், ஆனால் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது அந்த கால சூழ்நிலைகளைப் பொறுத்தது என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த பின்னணியில், இந்தியா ஒருபோதும் அணுக்குண்டைப் பயன்படுத்துவதற்கான அச்சுறுத்தலைக் கொடுத்தது இல்லை. ஆனால் பாகிஸ்தான் அணுக்குண்டு மிரட்டலைத் தொடர்ந்து கொடுத்து வருகிறது.
இந்நிலையில், பாகிஸ்தான் போன்ற ஒரு முரட்டுத்தனமான மற்றும் பொறுப்பற்ற அரசின் கைகளில் அணு ஆயுதங்கள் உண்மையிலேயே பாதுகாப்பானதாகக் கருதப்பட முடியுமா என்று கேள்வியெழுப்பியுள்ள மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், சர்வதேச அணுசக்தி அமைப்பின் (IAEA) மேற்பார்வையின் கீழ் பாகிஸ்தானின் அணு ஆயுதக் கிடங்குகள் கொண்டுவரப்படவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.