சென்னையில் முதலமைச்சரின் கான்வாய் வாகனங்கள் செல்வதற்காகப் போக்குவரத்தை போலீசார் நீண்ட நேரம் நிறுத்தி வைத்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், முதலமைச்சருக்கு மட்டும் தான் சாலையா..? எங்களுக்கு இல்லையா..? எனச் சரமாரியாகக் கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சென்னை ராணி மேரி கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் ஸ்டாலின், காமராஜர் சாலை வழியாக தலைமைச் செயலகம் திரும்பினார்.
முதலமைச்சரின் கான்வாய் வாகனங்கள் செல்வதற்கு ஏதுவாக, காமராஜர் சாலையில் போக்குவரத்தை போலீசார் முடக்கி வைத்திருந்தனர். முதலமைச்சரின் வாகனம் செல்லும் வரை நீண்ட நேரம் காக்க வைக்கப்பட்டதால் கொந்தளித்த பொதுமக்கள், அங்குப் பாதுகாப்புப் பணியிலிருந்த போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது முதலமைச்சருக்கு மட்டும் தான் சாலையா..? எங்களுக்கு இல்லையா..? எனப் பொதுமக்கள் சரமாரி கேள்வி எழுப்பினர். இதனால் செய்வதறியாமல் திணறிய போலீசார், கேள்வி எழுப்பிய பெண்களை மிரட்டி அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
முதலமைச்சரின் வாகனம் செல்லும் வரை பேருந்தை இயக்கக்கூடாது என மாநகர பேருந்து ஓட்டுநருக்கும் போலீசார் மிரட்டல் விடுத்தனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.