பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்க வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள இந்திய எம்.பிக்கள் குழு அந்நாட்டின் தலைவர்களைச் சந்தித்தது.
பஹல்காமில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இதனையடுத்து இந்திய ராணுவம் ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானிலிருந்த நூற்றுக்கணக்கான பயங்கரவாதிகளைக் கொன்று குவித்தது.
இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் வளர்த்து வரும் தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை விவரிக்க எம்.பிக்கள் தலைமையில் 7 அனைத்துக்கட்சி குழுக்கள் அமைக்கப்பட்டன.
அந்த வகையில் எம்.பி கனிமொழி தலைமையில் ரஷ்யா சென்ற எம்.பிக்கள் குழு ரஷ்ய தலைநகர் மாஸ்கோவை சென்றடைந்தது. பின்னர் அக்குழு அந்நாட்டின் வெளியுறவுத்துறை கூட்டமைப்பு கவுன்சிலில் ஆண்ட்ரி டெனிசோவ் தலைமையிலானோரை சந்தித்தது.
அப்போது ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதல் மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைத்தது. முன்னதாக ரஷ்யா மீதான உக்ரைனின் டிரோன் தாக்குதல் காரணமாக, கனிமொழி சென்ற விமானம் மாஸ்கோவின் வானில் வட்டமடித்தது குறிப்பிடத்தக்கது.
இதே போல ஜேடியு எம்.பி சஞ்சய் குமார் ஜா தலைமையிலான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழு ஜப்பான் தலைநகர் டோக்கியோவை சென்றடைந்தது. அந்தகுழு
ஜப்பானின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் மினொரு கிஹாரா, லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் சர்வதேச பணியகத்தின் இயக்குநர் ஜெனரல் ஷினாகோ சுச்சியா ஆகியோரை சந்தித்தது.
அப்போது அவர்களிடம் ஆப்ரேஷன் சிந்தூர் குறித்தும், பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் இந்தியா எதிர்ப்பது குறித்தும் விளக்கப்பட்டது.