ஆப்ரேஷன் சிந்தூர்- பாகிஸ்தான் விமானப்படையின் முக்கியமான உள்கட்டமைப்பில் கிட்டத்தட்ட 20 சதவீதத்தை முற்றிலுமாக அழித்துவிட்டது. தற்போது கிடைத்துள்ள தரவுகளின்படி, பாகிஸ்தானின் முதுகு எலும்பாகக் கருதப்படும் பல போர் விமானங்களும், முக்கியமான விமானத் தளங்களும் அழிக்கப் பட்டுள்ளன. அதைப் பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா பயங்கரவாதிகளுக்கு எதிராக ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் விரைவான மற்றும் ஒருங்கிணைந்த இராணுவ நடவடிக்கையை எடுத்தது.
அணுசக்தி நாடான பாகிஸ்தானின் 11 விமானப்படைத் தளங்களை ஒரே நேரத்தில் தாக்கிய முதல் நாடு என்ற சாதனையை இந்தியா படைத்தது. முக்கியமாகப் பாகிஸ்தானின் துறைமுக நகரமான கராச்சியின் அருகில் உள்ள 100 போலாரி விமானத் தளம் முழுவதுமாக தாக்கி அழிக்கப் பட்டது. மொத்தத்தில் பாகிஸ்தான் விமானப்படை உள்கட்டமைப்பில் 20 சதவீதம் முற்றிலுமாக அழிக்கப் பட்டன.
நான்கு நாட்களில் இந்தியாவின் அதிரடி தாக்குதல்களைத் தாக்குப் பிடிக்க முடியாத பாகிஸ்தான்,போரை நிறுத்துமாறு கெஞ்சிக் கேட்டுக் கொண்டதன் பேரில் இந்தியா, ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தற்காலிகமாக நிறுத்தியது.
இதற்கிடையே இந்தியாவின் ரஃபேல் விமானங்கள் உட்பட 8 போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாகவும், S-400 வான் பாதுகாப்பு அமைப்பைத் தாக்கியதாகவும் பாகிஸ்தான் கூறியது. இவையெல்லாம் பாகிஸ்தானின் வழக்கமான பொய் பிரச்சாரம் என்பது பின்னர் உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பாகிஸ்தான் விமானப்படை மிகப்பெரிய அளவில் பாதிப்புக்குள்ளானதாக Open Source Intelligence மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக, பாகிஸ்தான் விமானப்படையின் முக்கிய போர் விமானங்களான எட்டு F-16 ரக விமானங்களும், 4 JF-17 ரக விமானங்களும் முற்றிலும் அழிக்கப் பட்டுள்ளன. இவை பாகிஸ்தான் விமானப்படையின் முதுகெலும்பாகக் கருதப்படும் நவீன ரக விமானங்கள் என்பதால், இந்த இழப்பு அந்நாட்டுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் மூலம், பாகிஸ்தானுக்கு சுமார் 3.36 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்குப் பொருளாதார சேதம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப் பட்டுள்ளது.
ஒரு F-16 பிளாக் 52D போர் விமானத்தின் விலை 87.38 மில்லியன் டாலராகும். மொத்தம் 4 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன. விமான தளங்களில் நிறுத்தப்பட்டிருந்த போது நான்கு F-16 பிளாக் 52D விமானங்கள் அழிக்கப் பட்டுள்ளன. இதனால் மொத்தம் 700 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
மேலும், 93 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஒரு Saab 2000 Erieye Airborne Early Warning and Control அமைப்பும்,35 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஒரு IL-78 வான்வழி எரிபொருள் நிரப்பும் விமானமும் அழிக்கப் பட்டுள்ளன. AWACS விமானங்கள் மற்றும் முக்கிய செயல்பாட்டு உள்கட்டமைப்பு அழிக்கப்பட்டிருப்பது, பெரிய அளவிலான வான்வழி நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் பாகிஸ்தானின் திறனுக்கு விழுந்த பெரிய பின்னடைவு ஆகும்.
கூடுதலாக, பாகிஸ்தான் முறையே 3.2 மில்லியன் மற்றும் 8 மில்லியன் டாலர் மதிப்புள்ள இரண்டு CM-400AKG ஏவுகணைகளையும் இரண்டு ஷாஹீன்-வகுப்பு ஏவுகணைகளையும் இழந்துள்ளது. 36 மில்லியன் டாலர் மதிப்புடைய ஆறு Bayraktar TB2 ஆளில்லா போர் விமானங்களும் அழிக்கப் பட்டுள்ளன. மொத்தத்தில், இந்த வான்வழி இழப்புகள் மட்டும் சுமார் 524.72 மில்லியன் டாலர் ஆகும்.
40 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஒரு C-130H ஹெர்குலஸ் போக்குவரத்து விமானமும், 200 மில்லியன் டாலர் மதிப்புடைய அதிநவீன HQ-9 தரையிலிருந்து வான் ஏவுகணை (SAM) பேட்டரியும் தகர்க்கப் பட்டுள்ளன. 10 மில்லியன் டாலர் மதிப்புடைய இரண்டு மொபைல் கட்டளை மையங்களும் அழிக்கப் பட்டுள்ளன.
இந்த தரை அடிப்படையிலான இழப்புகள் மட்டும் மொத்தம் 599.52 மில்லியன் டாலர் ஆகும். கூட்டிக் கழித்துப் பார்த்தால்,ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையால், பாகிஸ்தானுக்கு சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் கரியாகியுள்ளது.
செயற்கைக்கோள் படங்கள், சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட தகவல்கள், விமானப் போக்குவரத்துத் தரவுகள் உள்ளிட்ட பல்வேறு பொது ஆதாரங்களைப் பகுப்பாய்வு செய்ததன் மூலம், பாகிஸ்தானின் நஷ்டம் கணக்கிடப் பட்டுள்ளன. இந்த பன்முக ஆதாரங்கள், பாகிஸ்தான் விமானப்படைக்கு ஏற்பட்ட சேதத்தின் அளவைத் திட்டவட்டமாக உறுதிப்படுத்துகின்றன.
இந்த பெரும் இழப்புகள், பாகிஸ்தான் விமானப்படையின் செயல்பாட்டுத் தயார்நிலை மற்றும் அதன் எதிர்கால போர் திறன்களில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பாதுகாப்பு வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆப்ரேஷன் சிந்தூர் வெறும் இராணுவ நடவடிக்கை மட்டுமல்ல. பயங்கரவாதத்தையும் ,பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண்ணையும் ஒட்டு மொத்தமாக அழிக்கும் ராஜ தந்திர நடவடிக்கையாகும்.
அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் நிலைநாட்டுவதில் இந்தியாவின் உறுதிப்பாட்டை ஆப்ரேஷன் சிந்தூர் வெளிப்படுத்தியுள்ளது.