பெங்களூருவில் நடைபெறும் ஆன்மிக மாநாட்டில் பங்கேற்பதற்காகத் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் இன்று ஸ்ரீ சொக்கநாத பெருமானுடன் ஞானரத யாத்திரை புறப்பட்டார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பாரதிய ஸந்த மகா பரிஷத் அமைப்பு சார்பில், பாரத நாட்டின் பண்பாட்டை பாதுகாக்கும் பொருட்டு மாபெரும் ஆன்மிக கருத்தரங்க மாநாடு நாளை நடைபெறவுள்ளது.
இதில் நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆதீனங்கள், சங்கராச்சாரியார்கள், ஜீயர்கள், மதகுருமார்கள், சாதுக்கள் உட்பட ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்கவுள்ளனர்.
இந்த மாநாட்டில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொள்ள உள்ளார்.
அதற்காக இன்று அவர் தருமபுரம் ஆதீனத்தில் இருந்து ஸ்ரீ சொக்கநாத பெருமானுடன் ஞானரத யாத்திரை புறப்பட்டார். அவருக்கு ஆதீன கல்வி நிறுவனங்களில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.