இந்தியா – அர்ஜென்டினா இருதரப்பு உறவு தொடர்பாக அதிபர் மிலேவுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார்.
அரசு முறை பயணமாக பிரதமர் மோடி அர்ஜென்டினா நாட்டிற்கு சென்றார். இந்நிலையில் பியூனஸ் அயர்ஸ் நகரில் உள்ள அதிபர் மாளிகைக்கு சென்ற அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அதிபர் ஜேவியர் மிலே, பிரதமர் மோடியை ஆரத்தழுவி உற்சாகமாக வரவேற்றார்..
தொடர்ந்து இருநாடுகளுக்கு இடையே பாதுகாப்பு, விவசாயம், சுரங்கம், எண்ணெய், வர்த்தகம் மற்றும் முதலீடு உள்ளிட்டவை குறித்து பிரதமர் மோடியும், அதிபர் மிலேவும் ஆலோசனை மேற்கொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் இந்திய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக ஸ்பெயின் ஆட்சியில் இருந்து அர்ஜென்டினா உள்ளிட்ட நாடுகள் விடுதலை பெற முக்கிய பங்காற்றிய சான் மார்ட்டின் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து மகாத்மா காந்தி மற்றும் ரபீந்திரநாத் தாஹூர் சிலைகளுக்கும் பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அதிபர் மிலே மற்றும் அந்நாட்டு மக்களின் அன்பிற்கு நன்றி கூறுவதாக தெரிவித்துள்ளார். தனது அர்ஜென்டினா பயணம் பயனுள்ளதாக இருந்தது எனவும் தங்கள் விவாதங்கள் இருதரப்பு நட்புக்கு உத்வேகத்தை அளிக்கும் என நம்புவதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தனது பயணம் தொடர்பான வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.
தொடர்ந்து அர்ஜென்டினா பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி, விமானம் மூலம் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ சென்றடைந்தார். அங்கு அவருக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து இன்றும் நாளையும் நடைபெறும் பிரிக்ஸ் அமைப்பின் 17-வது உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்ளவுள்ளார்.