அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தில் விடுபட்டுள்ள குளங்களை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார்.
சட்டசபை தேர்தலை முன்னிட்டு மேட்டுப்பாளையத்தில் இருந்து எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தை தொடங்கவுள்ளார். கோவை சென்றடைந்த அவருக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதைத்தொடந்து மேட்டுப்பாளையம் அடுத்த தேக்கம்பட்டியில் அமைந்துள்ள வனப்பத்திரக்காளியம்மன் கோயிலில் அவர் தரிசனம் செய்தார்.
இதையடுத்து தேக்கம்பட்டியில் நடைபெற்ற குறைகள் கேட்பு நிகழ்ச்சியில் விவசாயிகளுடன் கலந்துரையாடிய இபிஎஸ், அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தில் விடுபட்டுள்ள குளங்களை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டு வந்த மருத்துவ காப்பீடு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டிய அவர், நிதியின்மையால் கூட்டுறவு சங்கங்கள் நலிவடைந்து வருவதாகவும் வேதனை தெரிவித்தார்.