மதுரை மாநகராட்சியில் வரி குறைப்பு மோசடி தொடர்பாக மண்டல தலைவர்கள் ராஜினாமா செய்ததையடுத்து அவர்களது அறைகள் மூடப்பட்டு மாநகராட்சி ஆணையாளரிடம் சாவிகள் ஒப்படைக்கப்பட்டன.
மதுரை மாநகராட்சியில் தனியார் கட்டடங்களுக்கான சொத்து வரி நிர்ணயத்தில் குறைப்பு செய்து 150 கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாகப் புகார் எழுந்தது.
இதுகுறித்து 5 மண்டல அலுவலகங்களில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல் கட்டமாக 3வது மண்டல தலைவரின் நேர்முக உதவியாளரான தனசேகரன் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மண்டலத் தலைவர்கள் அனைவரும் ராஜினாமா செய்தனர்.
அவர்களது ராஜினாமா கடிதங்களை மாநகராட்சி ஆணையர் சித்ராவிஜயன் ஏற்றுக்கொண்டதையடுத்து மண்டல தலைவர்களின் அறைகளுக்குப் பூட்டுப் போடப்பட்டது.
இதற்கிடையே, முறைகேடு தொடர்பாக மாநகராட்சி மேயர் இந்திராணியிடம், மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
முறைகேடு பற்றி மேயருக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை என்பதால் அவரிடமும் விசாரணை நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது.