தேனி மாவட்டம், சுருளி அருவியில் நடந்த இரட்டை கொலை வழக்கில் விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
தேனி மாவட்டத்தில் உள்ள சுருளி அருவியில் கடந்த 2011-ம் ஆண்டு கல்லூரி மாணவியும், அவருடைய நண்பர் எழில் முதல்வனும் கொலை செய்யப்பட்டனர்.
மாணவியை மிரட்டி பணம் பறித்து பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதாகவும், எழில் முதல்வனை வெட்டி கொலை செய்ததாகவும் கூறி கட்டவெள்ளை என்பவர் கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பான வழக்கை விசாரித்த தேனி மாவட்ட அமர்வு நீதிமன்றம், கட்டவெள்ளைக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை, ஒரு ஆயுள் தண்டனை மற்றும் தூக்குத் தண்டனை விதித்துத் தீர்ப்பு அளித்தது.
இதனை எதிர்த்துத் தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்கில், கடந்த 2019-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் தூக்குத் தண்டனையை உறுதி செய்தது.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட பெண்ணிடம் இருந்து சேகரிக்கப்பட்ட உயிரணுவையும், கட்டவெள்ளையிடம் இருந்து சேகரிக்கப்பட்ட உயிரணுவையும் பரிசோதனை செய்ததில் பல சிக்கல்கள் இருப்பதைக் காண முடிந்ததாகத் தெரிவித்தது.
மேலும், வழக்கில் நேரடி சாட்சிகள் எதுவும் இல்லாத நிலையில், குற்றத்தைச் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க விசாரணை அமைப்பு தவறியதால் கட்டவெள்ளையின் தண்டனையை ரத்து செய்து வழக்கிலிருந்து முழுமையாக விடுவித்தது.