நாமக்கல் மாவட்டத்திலிருந்து பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட முட்டைகள் தற்போது முதன்முறையாக அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கு இடையே தொடங்கியிருக்கும் முட்டை வர்த்தகம் பற்றியும், அதனால் ஏற்படும் பயன்கள் குறித்தும் இந்த செய்தி தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்.
முட்டைகளின் நகரம் என்று அழைக்கப்படும் நாமக்கல் மாவட்டம் இந்தியாவின் முட்டை ஏற்றுமதியில் சுமார் 95 சதவிகிதம் பங்கு வகிக்கிறது. நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சுமார் 1300 கோழிப்பண்ணைகளும், ஏழரை கோடி முட்டையிடும் கோழிகளும் உள்ளன.
இவற்றின் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் ஆறரை கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படும் நிலையில், அதற்கான விலையைத் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு நாள்தோறும் நிர்ணயம் செய்து வருகிறது. நாமக்கல் மாவட்டத்திலிருந்து பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட முட்டைகள் தற்போது முதன்முறையாக அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
அரசின் சத்துணவுத் திட்டத்தில் தொடங்கி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், அண்டை மாநிலங்கள், உலக நாடுகள் வரை நாமக்கல் முட்டை மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. ஓமன், மாலத்தீவு, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், இலங்கை, பஹ்ரைன் ஆகிய நாடுகளுக்கு அதிகளவு முட்டைகள் நாமக்கல்லில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில் தற்போது முதன்முறையாக அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்திலிருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட 10 கோடி முட்டைகள் அங்கிருந்து 21 கண்டெய்னர்கள் மூலமாக அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது
நோய்த்தடுப்பு, தூய்மை, தடுப்பு மருந்து உள்ளிட்ட நடைமுறைகளைப் பின்பற்றிய பின்னர் ஏற்றுமதி செய்யப்படும் முட்டைகளுக்கு அமெரிக்காவில் உரியத் தரச்சான்று அளிக்கும் பட்சத்தில் அடுத்தடுத்தடுத்து பல கோடி முட்டைகளை அனுப்புவதற்கு வாய்ப்பாக அமையும் எனவும் முட்டை ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.