நாமக்கல்லில் கிட்னி விற்கப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
நாமக்கல் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூலி தொழிலாளர்களிடம் ஆசைவார்த்தை கூறி ஏமாற்றி கிட்னி பெறப்பட்டுள்ளது என்றும், கிட்னி விற்பனையில் திமுக நிர்வாகிகள் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் கூறினார்.
சிறப்பு புலனாய்வு குழு அமைத்து குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கிட்னி விற்பனையில் திமுக ஆட்சியாளர்கள் ஈடுபட்டுள்ளார்களா என விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
மயிலாடுதுறையில் மதுவிலக்கு DSP சஸ்பெண்ட் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவதாகவும், விசாரணை நடத்தாமல் சஸ்பெண்ட் செய்வது எவ்விதத்திலும் நியாயம் அல்ல எனறும் அவர் கூறினார்.
கள்ளச்சாராய தடுப்பில் முழு வீச்சில் செயல்பட்ட ஒரு அதிகாரியை சஸ்பெண்ட் செய்வது ஏற்புடையதல்ல என்றும், “முதலமைச்சர் நேரடியாக தலையிட்டு டிஎஸ்பிக்கு நியாயமும், நீதியையும் வழங்க வேண்டும் அண்ணாமலை கேட்டுக்கொண்டார்.
அதிமுக பாஜக கூட்டணியில் எந்தவித குழப்பமும் இல்லை என்றும், உள்துறை அமைச்சர் அமித்ஷா, இபிஎஸ் எடுக்கும் முடிவே இறுதியானது என்றும் அவர் தெரிவித்தார்.
2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி ஆட்சிக்கு வரும் என்றும், திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டுமென்ற ஒற்றைப்புள்ளியில் பயணித்து வருவதாகவும் அண்ணாமலை கூறினார்.