மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சேலத்தில் கட்டப்பட்ட ஈரடுக்கு பேருந்து நிலையம் போதிய பராமரிப்பின்றி சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவருவதாகப் புகார் எழுந்துள்ளது. 96 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு குடிநீர், கழிப்பறை வசதிகள் கூட இல்லாமல் அவல நிலையில் காட்சியளிக்கும் பேருந்து நிலையம் குறித்து தற்போது பார்க்கலாம்.
மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டது தான் இந்த ஈரடுக்கு பேருந்து நிலையம். 96 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட இந்த பேருந்து நிலையத்தைக் கடந்த 2023ம் ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
முதலமைச்சர் பேருந்து நிலையத்தைத் திறந்து வைத்த மறுநாளில் இருந்து அங்கிருந்த எஸ்கலேட்டர்கள் இயங்கவில்லை எனப் பொதுமக்களும், பயணிகளும் புகார் தெரிவிக்கின்றனர்.
இரண்டு அடுக்கில் கட்டப்பட்டுள்ள இந்த பேருந்து நிலையத்தில் முதல் தளத்திலிருந்து வாழப்பாடி, தாரமங்கலம் உட்படப் புறநகர்ப் பகுதிகளுக்கும், தரைதளத்திலிருந்து மாநகருக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த இரண்டு தளங்களையும் இணைக்கும் வகையில் ஏற்படுத்தப்பட்ட மின்தூக்கிகளும் பழுதடைந்த நிலையிலேயே இருப்பதால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகளும் பொதுமக்களும் பயன்படுத்தும் பேருந்து நிலையத்தில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. பேருந்து நிலையத்தில் திறக்கப்படாமல் இருக்கும் 20க்கும் மேற்பட்ட கடைகள் இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறிவருகிறது
மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட பேருந்து நிலையம், போதுமான பராமரிப்பின்றி மக்கள் பயன்படுத்தவே அச்சப்படும் அளவிற்கான சூழலை உருவாக்கியுள்ளது. பொதுமக்கள் மற்றும் பயணிகளின் கோரிக்கையை ஏற்றுப் பேருந்து நிலையத்தை முறையாகப் பராமரித்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.