காசாவில் கடுமையான பஞ்சம் தலைவிரித்தாடுவதால், உணவு, குடிநீருக்காக ஒவ்வொரு நொடியும் மக்கள் திண்டாடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஐ.நா. விடுத்த எச்சரிக்கை, பிறநாடுகளின் வலியுறுத்தல் காரணமாக, தினமும் 10 மணி நேரம் போர் நிறுத்தம் செய்வதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதியன்று தெற்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் கண்மூடித்தனமாக நடத்திய தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். 251 பேர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் காசா மீது போர் தொடுத்தது.
ஹமாஸ் பயங்கரவாத குழுக்களை அழித்தொழிக்க, மேற்கொள்ளப்பட்ட இஸ்ரேலிய படையெடுப்பு காசா முனையைச் சின்னபின்னமாக்கியுள்ளது. உருக்குலைந்த கட்டடங்கள், தலைவிரித்தாடும் உணவுப் பஞ்சம்… பட்டினியால் பலியாகும் உயிர்கள்.. எனக் கற்பனைக்கு எட்டாத பாதிப்பு காசாவை முடக்கிப்போட்டுள்ளது.
தொடர்ந்து போர் நீடித்து வரும் நிலையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலால், காசாவில் பலியானோர் எண்ணிக்கை 60 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இஸ்ரேல் ஏவுகணை வீச்சு தற்போதும்கூட 53 பேர் உயிரைக் குடித்துள்ளது.
ஓயாத போரால் உயிரைப் பிடித்துக் கொண்டு முகாம்களில் தஞ்சமடைந்தோரின் நிலையோ இன்னும் பரிதாபம். தினம், தினம் பட்டினியால் வாடும் காசா மக்கள், வயிறு ஒட்டிய உடலுடன் உணவை எதிர்பார்த்துக் காத்துக்கிடக்கும் நிலை தொடர்கிறது…. இந்தநிலையில், காசாவில் சர்வதேச ஊடகங்களுக்குச் செய்தி அனுப்பும் பத்திரிகையாளர் ஒருவர் பஞ்சத்தால் தனது கேமராக்களை விற்க முன்வந்துள்ளதும் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.
உணவுப் பஞ்சத்தால், காசாவில் மூன்றில் ஒருவர் உணவு இல்லாமல் பட்டினியால் வாடுவதாகவும், ஊட்டச்சத்துக் குறைபாடு அதிகரித்து வருவதால், 90 ஆயிரம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உடனடி சிகிச்சை தேவைப்படுவதாகவும் ஐ.நா.விவரித்துள்ளது.
உலக நாடுகள் காசாவுக்கு அனுப்பும் உணவுப் பொருட்கள், நிவாரண உதவிகள் இஸ்ரேல் வழியாகவே கொண்டு செல்லப்படுவதால், அவை பாதிக்கப்பட்டோரைச் சென்று சேர்ந்ததாகத் தெரியவில்லை. காசாவுக்குள் உதவிப் பொருட்கள் செல்வதற்குத் தடையை ஏற்படுத்த வேண்டாம் என இஸ்ரேலை, பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
காசாவில் மனிதாபிமான பேரழிவு நடந்து கொண்டிக்கும் நிலையில், உலக நாடுகளின் வலியுறுத்தலால், நாள் ஒன்றுக்கு 10 மணி நேரம் போர் நிறுத்தத்தை இஸ்ரேல் அறிவித்துள்ளது. அல்-மவாஷி, டெய்ர் அல்-பலாஹ், காசா சிட்டியில் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை போர் நிறுத்தம் அமலில் இருக்கும் என்றும், அதற்குள் உணவு உள்ளிட்ட உதவிப் பொருட்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.