நாமக்கல் அருகே விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி விளைநிலங்களில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் பணி நடைபெற்று வருவதாகப் புகார் எழுந்துள்ளது. அமைச்சர் மதிவேந்தன் மற்றும் எம் பி ராஜேஷ்குமாரின் தூண்டுதலின் பேரில் நடைபெற்று வருவதாகக் கூறப்படும் இப்பணிகள் விவசாயிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் வளையப்பட்டி, அரூர் புதுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட விளைநிலங்களில் தலைமுறை தலைமுறையாக அப்பகுதி விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.
குன்றுகள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளை உள்ளடக்கிய விவசாய நிலங்களில் 800 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க முயற்சிக்கும் தமிழக அரசின் நடவடிக்கை அப்பகுதி விவசாயிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அறிவிப்பு வெளியானது தொடங்கி அரசாணை பிறப்பிக்கும் வரை தொடர் எதிர்ப்புகளை தெரிவித்தும் சிப்காட் அமைக்கும் பணிகளை தொடர்வது கண்டனத்திற்குரியது என விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
விளை நிலங்களையும், நீர்நிலைகளையும் அழித்துக் கொண்டு வரப்படும் சிப்காட் தொழிற்பேட்டைக்கு அப்பகுதி மக்களும் விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவித்துத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக எம் பி ராஜேஷ்குமார் மற்றும், அமைச்சர் மதிவேந்தன் ஆகிய இருவரின் நெருக்கடியின் பேரிலேயே விளைநிலங்களைத் தரிசு நிலம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.
தேர்தலுக்கு முன்பாக விளைநிலங்கள் பாதுகாக்கப்படும் என வாக்குறுதியளித்த திமுக, ஆட்சிக்கு வந்த பின்பு அதற்கு முரணாகச் செயல்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். தமிழக அரசின் விவசாய விரோதப் போக்கு தொடருமேயானால் அடுத்துவரும் தேர்தலில் திமுகவுக்கு மிகப்பெரிய தோல்வியை வழங்கவும் அப்பகுதி மக்கள் தயாராகி வருகின்றனர்.
தலைமுறை, தலைமுறையாக விவசாயம் செய்து வந்த நிலங்களை திடீரென தரிசு நிலம் என அறிவிப்பதும், அதில் சிப்காட் அமைப்பதற்கான பணிகளைத் தொடங்கியிருப்பதும் ஒட்டுமொத்த விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. விளைநிலங்களைப் பாதுகாக்க வேண்டிய அரசு நிர்வாகமே அதனைத் திட்டமிட்டு அழிக்கலாமா என்ற கேள்வியும் அனைவர் மத்தியில் எழுந்துள்ளது.