சமூக வலைத்தளங்களிலும், பொது மேடைகளிலும் தவெக தலைவர் விஜய் மீதான நாம் தமிழர் கட்சியினரின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இந்த பின்னணியில், முதலமைச்சருடன் சீமான் நடத்திய சந்திப்பு இருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. முதலமைச்சருடனான சந்திப்பின் போது நடைபெற்றது என்ன என்பது குறித்தும், விஜய்க்கு எதிரான சீமானின் போர் அறிவிப்பு குறித்தும் இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து கடந்த சில தினங்களுக்கு முன் காலமான நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முதலமைச்சரை நேரில் சந்தித்து தனது இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்திருந்தார்.
மு.க. முத்துவின் மறைவுக்கு அவரது மனைவிக்கு இரங்கல் தெரிவிக்காமல், அரசியலில் நேர் எதிரியாகக் கருதப்படும் முதலமைச்சரை, சீமான் சந்தித்தது பெரும் விவாதப் பொருளாக மாறியது. அதோடு முதலமைச்சருடனான சந்திப்பிற்குப் பின்னர் சீமானும், அவரது நாம் தமிழர் கட்சி தொண்டர்களின் ஒட்டுமொத்த கவனமும் தவெக தலைவர் விஜய்யை அட்டாக் செய்வதிலேயே திரும்பியிருப்பதும் தெரியவந்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியை விஜய் தொடங்கியதோடு, அக்கட்சியின் கொள்கைத் தலைவர்களில் ஒருவராக ஈ.வெ.ராவை அறிவித்ததும் சீமானுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. மெல்ல மெல்ல விஜய்யை விமர்சிக்கத் தொடங்கிய சீமான், தற்போது கடுமையாக விமர்சிக்கத் தொடங்கியுள்ளார். அதிலும் முதலமைச்சருடனான சந்திப்புக்குப் பின்னர் விஜய்யைக் கடுமையாக விமர்சிக்கும் அளவிற்குச் சூழலுக்குச் சீமான் தள்ளப்பட்டுள்ளார். முதலமைச்சர் – சீமான் இடையே சந்திப்பு குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழத் தொடங்கியுள்ளன.
தமிழகத்தில் ஆளும் திமுகவை நேரடியாக விமர்சித்து வரும் தவெக தலைவர் விஜய் மீதான தாக்குதலை அதிகரிக்கும் அசைன்மெண்ட் சீமானிற்கு திமுக தரப்பில் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதற்கேற்றார் போல முதலமைச்சரைச் சந்தித்த பின்பு, திமுகவைத் தாக்கிப் பேசுவதை குறைத்துவிட்டு தவெகவை குறிவைத்து சீமான் தாக்குதல் நடத்தத் தொடங்கியுள்ளார்.
ஆளுங்கட்சியை விட்டுவிட்டு இதுவரை தேர்தலையே சந்திக்காத தவெகவை போருக்குச் சீமான் அழைத்திருப்பதன் மூலம் திமுகவுக்கும் நாம் தமிழருக்கும் உடன்படிக்கை எட்டியிருப்பதாகவும் தவெகவினர் சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.
சீமானின் வழியில் அவரது தொண்டர்களும் சமூக வலைத்தளங்களிலும், பொதுவெளியிலும் தவெக மீதும் அதன் தலைவர் விஜய் மீதும் சரமாரியான தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இன்னும் எத்தனை எத்தனை தேர்தல்கள் வந்தாலும் தனித்தே தேர்தலைச் சந்திப்போம் எனப் பொதுவெளியில் முழங்கிவிட்டு, விஜய்யை எதிர்ப்பதற்காகத் திரைமறைவில் திமுகவுடன் நாம் தமிழர் கூட்டணி வைத்திருப்பதாகவும், தவெக நிர்வாகிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
நடிகராக இருந்த போது சீமானின் நம்பிக்கைக்கு உரியத் தம்பியாகத் திகழ்ந்த விஜய், அரசியல் கட்சியைத் தொடங்கிய பின் பரம எதிரியாக மாறியது ஏன்? என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது. அதோடு தமிழ் தேசியமா ? திராவிடமா எனச் சவால் விட்டுக் கொண்டிருந்த சீமான், தற்போது சினிமாவா? சிந்தாந்தமா என விஜய்யுடன் மோதுவது அவர் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்திருப்பதாகவும் விமர்சனம் எழுந்துள்ளது.
















