அடுத்த மாதம் வரவிருக்கும் சுதந்திர தினத்திற்கான தேசியக் கொடிகளின் விற்பனை சேலத்தில் களைகட்டத் தொடங்கியுள்ளது. தேசியக் கொடியோடு பேண்டுகள், பேட்ஜ்கள் ஆகியவைகளும் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஆகஸ்ட் 15 ஆம் தேதி நாடு முழுவதும் சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தேசிய கொடி, மூவர்ணங்கள் அடங்கிய தொப்பி, பேட்ஜ், சால்வை என பல்வேறு விதமான பொருட்களின் விற்பனைகள் களைகட்டத் தொடங்கியுள்ளது.
வழக்கமாக வரும் பிளாஸ்டிக் கொடிகள் நடப்பாண்டில் முற்றிலுமாக தவிர்க்கப்பட்டிருப்பதோடு, முழுக்க முழுக்க துணியால் செய்யப்பட்ட கை பேண்டுகள், தொப்பிகள், பேட்ஜ்கள் உள்ளிட்டவை மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
ஐ லவ் இந்தியா, வந்தே மாதரம் போன்ற வாசகங்கள் அடங்கிய பேண்டுகளும், பேட்ச்களும் பள்ளி கல்லூரி மாணவர்கள் தொடங்கி இளைஞர்கள் வரை நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. டெல்லி, சென்னை, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து வந்திருக்கும் இந்த பொருட்களை பலரும் ஆர்வத்துடன் வாங்கி வருகின்றனர். சுதந்திர தினத்திற்கு இன்னமும் சுமார் 20 நாட்கள் இருக்கும் நிலையில் தற்போதே ஆர்டர்கள் குவிந்து வருவதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சுதந்திர தினம், குடியரசு தினம் உள்ளிட்ட தினங்களில் தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்துவதும், அவற்றை நெஞ்சில் ஏந்துவதும் நம் நாட்டிற்குச் சுதந்திரம் பெற்றுத் தந்த விடுதலை வீரர்களுக்கு நாம் செலுத்தும் மரியாதையாகும். அத்தகைய மரியாதையை செலுத்தும் எண்ணம் தமிழக இளைஞர்களிடையே அதிகரித்துவருவது அவர்களிடம் இருக்கும் தேசப்பற்றையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.