ரஷ்யாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த பூகம்பம், ஜப்பானின் ஹிரோசிமா பகுதியில் அமெரிக்கா வீசிய அணுகுண்டைப்போல் 14 ஆயிரத்து 300 மடங்கு வீரியமானது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த எச்சரிக்கை, ரஷ்யா, ஜப்பான், அமெரிக்காவை நடுநடுங்க வைத்துள்ளது.
1945ம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் உலகப்போரில், ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்கள் மீது அமெரிக்கா அணுகுண்டுகளை வீசி 80 ஆண்டுகள் கடந்துவிட்டது. ஆனாலும் அப்பகுதியில் அணுகுண்டின் தாக்கம் குறைந்தபாடில்லை.
அணுகுண்டுவீச்சால், ஹிரோஷிமாவில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேரும், நாகசாகியில் 74 ஆயிரம் பேரும் கொல்லப்பட்டனர். உயிர் பிழைத்த பெரும்பாலான மக்கள் அணு கதிர்வீச்சின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழக்க நேரிட்டது.
இந்நிலையில், ரஷ்யாவில் ஏற்பட்டுள்ள சக்தி வாய்ந்த பூகம்பத்தை, ஹிரோஷிமாவில் வீசப்பட்ட “லிட்டில் பாய்” அணுகுண்டை போல், 14 ஆயிரத்து 300 மடங்கு வீரியமானது என்று கூறுகின்றனர் விஞ்ஞானிகள். ரிக்டரில் 8.8 ஆக பதிவான இந்த பூகம்பம் ஒரு நகரத்தை ஒரு நொடியில் சின்னாபின்னமாக்கும் ஆற்றல் கொண்டது.
8.8 ரிக்டர் அளவு பூகம்பம் என்பது, 60 லட்சத்து 27 ஆயிரம் டன் ட்ரைநைட்ரோடொலுயீன் (TNT)வெடிமருந்துக்கு ஒப்பானது என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஜப்பானும், ரஷ்யாவும் வளர்ந்த நாடுகள் என்றாலும், நிலநடுக்கத்தால் அந்நாடுகள் அடையும் உயிரிழப்பும், பொருட்சேதமும் அதிகம் என்றே கூறப்படுகிறது.
ஜப்பானின் கிழக்கு கடற்கரையில் உள்ள டோஹோகு பிராந்தியத்தில் 2011 ஆம் ஆண்டு மார்ச் 11 ஆம் தேதி ஏற்பட்ட பயங்கர பூகம்பம் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது.
பூகம்பமும், அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட சுனாமியும் 20 ஆயிரம் பேரின் உயிரைக் குடித்தது. இதேபோன்று ரஷ்யாவில் கம்சட்கா பகுதியும் அடிக்கடி நிலநடுக்கத்தை எதிர்கொள்ளும் பகுதியாகப் பார்க்கப்படுகிறது. 2010ம் ஆண்டு சிலியில் ஏற்பட்ட நிலநடுக்கம், 10 ஆயிரம் ஹிரோஷிமா அணுக்குண்டுகளுக்கு இணையாகப் பார்க்கப்பட்டது.
இயற்கைப் பேரழிவுகள் எதிர்பாராத, கணிக்க முடியாத, கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு அழிவைத் தரக்கூடியவை. அவற்றை முன்கூட்டியே கணித்தாலும், சேதத்தைத் தடுக்க முடியாது என்பதால், ரஷ்யா, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் அவற்றை எண்ணி கவலை கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.