அதிகாரிகளின் மெத்தனப்போக்கால் காவல்துறை மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டதாக சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
நெல்லையில் மதபோதகர் காட்ஃப்ரே நோபிள் என்பவரை கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் தாக்கியதாக முன்னாள் எம்பி ஞானதிரவியம் உட்பட 33 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில் வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்குமாறு நெல்லை நீதிமன்றத்திற்கு உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நோபிள் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், முன்னாள் எம்பி ஞானதிரவியத்திற்கு நீதிமன்ற சம்மனை 6 மாதங்களாக வழங்காத பாளையங்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர்கள் ஆஜராகினர்.
அப்போது கடந்தாண்டு நவம்பரில் பிறப்பிக்கப்பட்ட சம்மனை இந்தாண்டு மார்ச் வரை வழங்காதது குறித்து கேள்வி எழுப்பிய நீதிபதி வேல்முருகன், இதுதொடர்பாக பாளையங்கோட்டை காவல்நி லையத்தின் அப்போதைய காவல் ஆய்வாளர் தில்லை நாகராஜனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு டிஜிபிக்கு உத்தரவிட்டார்.
மேலும், ஆறு மாதங்களில் வழக்கின் விசாரணையை முடிக்க வேண்டும் என நெல்லை நீதிமன்றத்திற்கும் ஆணையிட்டார். பெரும்பாலான வழக்கு விசாரணை தாமதத்துக்கு காவல்துறையினர் தான் காரணம் என அதிருப்தி தெரிவித்த நீதிபதி,
மெத்தனப்போக்கால் காவல்துறை மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டதாக அதிருப்தி தெரிவித்தார்.