அதிமுக – பாஜக கூட்டணியைக் கண்டு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தேர்தல் ஜுரம் வந்து விட்டதாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ’மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ சுற்றுப்பயணத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், 2026-ம் ஆண்டு தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் எனவும், அதிமுக – பாஜக கூட்டணியை கண்டு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆட்சி பறிபோய்விடும் எனும் அச்சம் வந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.
16 ஆண்டு காலம் மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வகித்த திமுக, தமிழகத்திற்கான திட்டங்களை ஏன் கேட்டுப் பெறவில்லை எனவும் அவர் கேள்வி எழுப்பினார். மேலும், அரசு திட்டங்களுக்கு ஸ்டாலின் பெயரை வைத்து திமுக விளம்பரம் தேடி வருவதாக குற்றம் சாட்டிய இபிஎஸ், திமுக இரட்டை வேடம் போடும் கட்சி என்றும், திமுக ஆட்சியில் காவல்துறை ஏவல் துறையாக மாறி விட்டதாகவும் குற்றஞ்சாட்டினார்.
முன்னதாக பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழகம் முழுவதும் நாள்தோறும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடைபெறுவதாக தெரிவித்தார். மேலும், அதிமுக – பாஜக கூட்டணி இயற்கையானது எனக் கூறிய அவர், மக்கள் நலத்திட்டங்களை எடப்பாடி பழனிசாமியால் மட்டுமே கொண்டு வர முடியும் எனவும் தெரிவித்தார். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வருவது உறுதி என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.