அண்மையில் இஸ்ரோவும் நாசாவும் இணைந்து அனுப்பிய நிசார் செயற்கைக்கோளை வடிவமைப்பதில், சென்னை ஐஐடியின் பேராசிரியர் ஒருவர் மிக முக்கிய பங்களிப்பாற்றியுள்ளார். அவர் யார்? அவரின் பங்களிப்பென்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.
புவியின் மேற்பரப்பை முழுமையாகக் கண்காணிக்கும் நோக்கில், ஜூலை 30ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜிஎஸ்எல்வி எப்-16 ராக்கெட் மூலம் நிசார் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது. இஸ்ரோ மற்றும் நாசா விஞ்ஞானிகள் இணைந்து உருவாக்கிய இந்த செயற்கைக்கோளின் மதிப்பு 12 ஆயிரம் கோடி ரூபாய்.
புவியைக் கண்காணிக்க இதற்கு முன்னரும் ஏராளமான செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டுள்ளன. ஆனால், அவற்றைக் கொண்டு புவியின் மேற்பரப்பைத் துல்லியமாகப் படம் எடுப்பதில் சிக்கல் இருந்து வந்தது. மேகமூட்டம் உள்ளிட்ட காரணங்களில் செயற்கைக்கோளின் செயல்பாடு பாதிக்கப்பட்டது.
ஆனால், இந்த குறையை, சென்னை ஐஐடியை சேர்ந்த பேராசிரியர் ஒருவர் நீக்கியுள்ளார். அவரது பெயர், மணிகண்டன் மாத்தூர். விண்வெளி பொறியியல் துறையைச் சேர்ந்த அவர், இஸ்ரோ மற்றும் நாசா விஞ்ஞானிகளுடன் இணைந்து நிசார் செயற்கைக்கோளின் வடிவமைப்பில் பணியாற்றினார்.
அவர் வழங்கிய ஆலோசனைகள் மூலம், புவியின் மேற்பரப்பில் 10 மீட்டர் அளவிலான சிறிய இடங்களைக் கூட துல்லியமாகப் படம் பிடிக்கும் வகையில் நிசார் செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த சிறிய இடத்தில் நிகழும் சில சென்டிமீட்டர் அளவிலான மாற்றங்களைக்கூட நுட்பமாக ஆய்வு செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும், வட இந்தியப் பெருங்கடலோர பகுதிகளைத் துல்லியமாகப் படம் எடுக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், கடலோரப் பகுதிகளை எப்போது, எந்த எண்ணிக்கையில் படங்கள் எடுக்க வேண்டும் என்பது குறித்தும் பேராசிரியர் மணிகண்டன் ஆலோசனை வழங்கியுள்ளார். நிசார் செயற்கைக்கோள் ஒருமுறை படம் எடுத்தால், அந்த இடத்தை அடுத்த 12 நாட்கள் கழித்து மீண்டும் படம் எடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்படி நிசார் செயற்கைக்கோளின் செயல்பாட்டில் பேராசிரியர் மணிகண்டனின் பங்கு அளப்பறியது.
ஆலோசனை வழங்கியதுடன் பேராசிரியர் மணிகண்டனின் பணி முடியவில்லை. செயற்கைக்கோள் அனுப்பும் தகவல்களை, அவரும் அவரது குழுவினரும் ஆய்வு செய்ய உள்ளனர். குறிப்பாக, வங்காள விரிகுடாவில் நதி நீர் கலக்கும் விதம் குறித்தும், இந்தியக் கடலோரப் பகுதியில் ஏற்படும் உள் ஈர்ப்பு அலைகள் குறித்தும், இவற்றால் வானிலையில் எத்தகைய மாற்றங்கள் நிகழ்கிறது என்பது குறித்தும், ஆய்வு மேற்கொள்ளவுள்ளனர்.
இது குறித்துப் பேட்டியளித்த அவர், செயற்கைக்கோள் படங்களைக் கொண்டு என்னென்ன பணிகளை மேற்கொள்ள முடியும் என்பது குறித்த புதிய விழிப்புணர்வு இனி இந்திய அறிவியல் சமூகத்தில் ஏற்பட உள்ளதாகக் கூறினார். நிசார் செயற்கைக்கோளை உருவாக்குவதில் துணைநின்ற பேராசிரியர் மணிகண்டனால், ஐஐடி மெட்ராஸ் மட்டுமல்ல, தமிழகமும் பெருமை கொள்கிறது.