இந்திய ராணுவம் கடந்த ஒரு வாரத்தில் 3 முக்கிய ஆப்ரேஷன்களை நடத்தி, 8 பயங்கரவாதிகளைச் சுட்டுக் கொன்றுள்ளது. இந்நிலையில், அந்த ஆப்ரேஷன்கள் குறித்த செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
பஹல்காம் தாக்குதல் சம்பவத்திற் பிறகு, ஜம்மு காஷ்மீர் எல்லைப்பகுதியில் முன்பை காட்டிலும் பாதுகாப்பு மிகவும் பலப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு தீவிரவாதிகூட இனி இந்திய எல்லைக்குள் நுழையக் கூடாது என்ற நோக்கில், எல்லை பாதுகாப்புப் படையினர், இரவு பகலாகத் தீவிர ரோந்து பணிகளிலும், தேடுதல் வேட்டைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக, இந்திய ராணுவத்தால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட 3 ஆப்ரேஷன் நடவடிக்கைகள், தீவிரவாதிகளைத் தேடி தேடி களையெடுத்துள்ளன. அதில் முதல் நடவடிக்கையின் பெயர்,ஆப்ரேஷன் மகாதேவ்.
லஷ்கா்-ஏ-தொய்பா தீவிரவாதிகள் ரகசிய செய்திகளை அனுப்பப் பயன்படுத்தும் கருவி ஒன்றின் சிக்னல் ஹாா்வான் பகுதியில் கடந்த மாதம் கண்டறியப்பட்டது. இதனையடுத்து அந்த பகுதியைத் தீவிரமாகக் கண்காணித்து வந்த இந்திய ராணுவத்தினர், ஜூலை 27ஆம் தேதி ஆப்ரேஷன் மகாதேவ் நடவடிக்கையைத் தொடங்கினர்.
முல்நாா் என்ற கிராமத்தைச் சுற்றிவளைத்த அவர்கள், பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவராகக் கருதப்படும் சுலைமான் ஷா உள்ளிட்ட 3 பயங்கரவாதிகளைச் சுட்டுக்கொன்றனர்.
இந்திய ராணுவம் மேற்கொண்ட இரண்டாவது நடவடிக்கையின் பெயர், ஆப்ரேஷன் சிவசக்தி. இந்திய எல்லையில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளை குறிவைத்து இந்த ஆப்ரேஷன் நடத்தப்பட்டது. ஜூலை 30ம் தேதி நடத்தப்பட்ட அந்த ஆப்ரேஷன் நடவடிக்கையின்படி, ஜம்மு – காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
அப்போது, இரண்டு பயங்கரவாதிகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து இந்திய ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அவர்கள் இருவரும் கொல்லப்பட்டனர்.
இதனையடுத்து உடனடியாக ஆப்ரேஷன் அகால் என்ற மற்றொரு நடவடிக்கை தொடங்கப்பட்டது. ஜம்மு – காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாகக் கிடைத்த தகவலின்படி இந்த ஆப்ரேஷன் மேற்கொள்ளப்பட்டது. இரவு பகலாகத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட ராணுவத்தினர், பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தை சுற்றி வளைத்தனர். பின்னர் அவர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இப்படி, கடந்த ஒரு வாரத்தில் அடுத்தடுத்து 3 ஆப்ரேஷன்களை இந்திய ராணுவம் வெற்றிகரமாக நடத்தியுள்ளது. அதன்மூலம், பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவர் உள்ளிட்ட 8 பயங்கரவாதிகளையும் களையெடுத்துள்ளது.