பிரதமர் மோடி இங்கிலாந்துக்குப் பயணம் மேற்கொண்டபோது, அவரது பாதுகாப்பு அதிகாரியாகப் பெண் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார். அவர் யார்? தற்போது அவர் குறித்து பலரும் பேசி வருவது ஏன்? என்பது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.
ஜூலை 23ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி, இங்கிலாந்துக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டார். அங்கு, அந்நாட்டுப் பிரதமர் கியர் ஸ்டார்மரை சந்தித்த அவர், தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் உள்ளிட்ட பல முக்கிய ஒப்பந்தங்களை மேற்கொண்டார்.
பிரதமரின் இந்த பயணமும், அவர் மேற்கொண்ட ஒப்பந்தங்களும் எந்த அளவுக்குக் கவனம் பெற்றதோ, அதே அளவுக்குக் கவனத்தை மோடிக்குப் பாதுகாப்பு வழங்கிய பெண் அதிகாரியும் பெற்றுள்ளார்.
பிரதமருக்கு SPG எனப்படும் சிறப்புக் குழு பாதுகாப்பு அளித்து வருகிறது. உள்நாடு, வெளிநாடு எனப் பிரதமர் எங்குச் சென்றாலும் இந்த குழுவினரும் உடன்செல்வார்கள். பிரதமர் செல்லும் இடங்களைப் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வருவதும், பிரதமரின் பாதுகாப்பை உறுதி செய்வதும்தான் SPG அதிகாரிகள் பிரதான வேலை. சுருக்கமாகச் சொல்வதென்றால், பிரதமர் மீது சிறு துரும்பு கூடப் படாமல் பார்த்துக்கொள்பவர்கள் இவர்கள்தான்.
இத்தகைய எஸ்.பி.ஜி. பிரிவில் சேர்வது எளிதான காரியமல்ல. காவல்துறையில் சேரவே கடுமையான பயிற்சிகள் வழங்கப்படுகிறது என்றால், எஸ்.பி.ஜி. பிரிவில் வழங்கப்படும் பயிற்சிகள் குறித்து விவரிக்கத் தேவையில்லை. உடல் சார்ந்த பயிற்சிகளைத் தாண்டி, நெருக்கடியான சூழலில் எவ்வாறு செயல்படுவது, ஆபத்துகளை முன்னரே எப்படிக் கணிப்பது உள்ளிட்ட பல பயிற்சிகள் எஸ்.பி.ஜி. அதிகாரிகளுக்கு வழங்கப்படும்.
இந்த குழுவைச் சேர்ந்த ஆண் அதிகாரிகள் மட்டுமே இதுவரை பிரதமருக்குப் பாதுகாப்பு அளித்து வந்தார்கள். ஆனால், இங்கிலாந்து பயணத்தின்போது முதன்முறையாகப் பெண் அதிகாரி ஒருவர் பிரதமருக்குப் பாதுகாப்பு அளித்து வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுதியுள்ளார்.
அந்த பெண் அதிகாரியின் பெயர் அடாசோ கபேசா. அவரது பூர்வீகம் மணிப்பூர். உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் SSB எனப்படும், சஷாஸ்திர சீமா பால் அமைப்பில் இணைந்து தனது பயணத்தை அவர் தொடங்கினார்.
தற்போது, உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பித்தோராகரில் 55வது பட்டாலியனில் அவர் பணியாற்றி வருகிறார். இங்கிலாந்து பயணத்தின்போது பிரதமர் நரேந்திர மோடியுடன் சென்ற இவர், பிரதமருக்குப் பாதுகாப்பு அரணாக இருந்தார்.
தேசத்தின் உயரிய தலைவர்களில் ஒருவருக்குப் பாதுகாப்பு அளிக்கும் பணி, பெண் அதிகாரி ஒருவருக்கு வழங்கப்பட்டதற்குப் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். பாதுகாப்புத் துறையில் பெண்களும் சாதிக்க முடியும் என்பதற்கு அடாசோ கபேசா முன்னுதாரணமாக உள்ளதாகவும் அவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அடாசோ கபேசாவால் கவரப்பட்ட பல பெண்கள், பாதுகாப்புப் பணிகளில் சேர்ந்து பணியாற்ற ஆர்வம் தெரிவித்து வருகின்றனர்.