1947-ல் சுதந்திரம் கிடைத்துவிட்டது என்ற மகிழ்ச்சியை விட, தாங்கமுடியாத பெரும் துன்பத்தைத் தேசப் பிரிவினை ஏற்படுத்தி இருந்தது. ஆட்சி அதிகார மாற்றத்துக்கான வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. சுதந்திரத்துக்கு முந்தைய கடைசி 15 நாட்கள் நாட்டில் என்ன நடந்தது என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
எல்லாப் பொறுப்புகளையும் இந்தியத் தலைவர்களிடம் ஒப்படைக்க இன்னும் சில தினங்களே இருந்த நிலையில் வைசிராய் மவுண்ட்பேட்டன் பரபரப்பாக இருந்தார். ஆகஸ்ட் 7 ஆம் தேதி, முகமது அலி ஜின்னா,கராச்சிக்குச் செல்ல முடிவு செய்யப்பட்டிருந்தது. முன்னதாக டெல்லியில் 10 ஓளரங்கசீப் சாலையில் தான் வசித்து வந்த பெரிய பங்களாவை ராமகிருஷ்ண டால்மியாவுக்கு விற்றுவிட்டு, கராச்சிக்குக் கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்தார்.
ஆகஸ்ட் 4ம் தேதி, டெல்லியில் வைசிராய் மவுண்ட் பேட்டன், பலுசிஸ்தான் தலைவர் மிர் அகமது யார்கான் மற்றும் ஜின்னாவுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தார். ஈரான் எல்லையை ஒட்டி அமைந்திருந்த பலுசிஸ்தானின் சன்னி முஸ்லிம்களே பெரும்பான்மையாக இருந்தனர். ஆனால் ஈரானிலோ, ஷியா முஸ்லிம்களே அதிகமாக இருந்தனர்.
சுட்டுப் போட்டாலும் எந்தக் காரணத்தைக் கொண்டும் எதற்காகவும் ஒரே புள்ளியில் சேர்ந்து இருக்க மாட்டார்கள் என்பது நிஜம். எனவே பலுசிஸ்தான் மக்கள் ஈரானுடன் இணையமாட்டார்கள் என்பதை அறிந்த மவுண்ட்பேட்டன் ,அவர்களைப் பாகிஸ்தானுடன் இணைய பேச்சுவார்த்தை நடத்தினார்.
மொழி,பண்பாடு,மற்றும் வாழ்வியல் நெறி காரணமாகப் பஞ்சாப் மற்றும் சிந்து மாகாண முஸ்லீம் மக்களுடன் பலுசிஸ்தான் மக்கள் ஒத்துப் போக முடியாது என்பதால், பாகிஸ்தானுடன் சேர ஒப்புக் கொள்ளவே இல்லை.
துரதிர்ஷ்டமாக, பெரும்பான்மையாக 90 சதவீதத்துக்கும் அதிகமாக இந்துக்களும் சீக்கியர்களும் வாழ்ந்து வந்த பஞ்சாபின் லாயல்பூரில் வன்முறை கலவரங்கள் ஏற்பட்டன. 5 சதவீதத்துக்கும் குறைவாக வாழ்ந்து வந்த இஸ்லாமியர்கள்,லாகூரில் இஸ்லாமியர்களுடன் சேர்ந்து இந்தக் கலவரத்தில் ஈடுபட்டனர். முஸ்லீம் நேஷனல் கார்டு என்ற அமைப்பு முன்னின்று இந்த வன்முறைகளை நடத்தியது.
மசூதியில் ஒன்று கூடிய முஸ்லிம்கள் கராச்சி வரும் முகமது அலி ஜின்னாவுக்கு வரவேற்பு கொடுக்கவும், இந்துக்களை எல்லாம் விரட்டி அடிக்கவும் திட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள். பாகிஸ்தானுடன் இணைய விருப்பம் தெரிவித்த ஹைதராபாத் நிஜாம், புவியியல் ரீதியாக அது சாத்தியம் இல்லை என்று தெரிந்ததும், தனி நாடாக இருக்க விரும்பினார்.
அதற்காக, தன் பிரதிநிதிக் குழுவை ஜின்னாவைச் சந்திக்க அனுப்பி வைத்திருந்தார் நிஜாம். ஜின்னாவும் உதவுவதாக பேச்சளவில் கூறி வழியனுப்பி வைத்தார். அதேநேரம்,நேருவின் இல்லத்தில், முதல் அமைச்சரவை பட்டியல் குறித்த விவாதங்கள் நடந்து கொண்டிருந்தன. இறுதி பட்டியலை வெளியிடுவதற்கான பணியில் ராஜேந்திர பிரசாத் தீவிரமான ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார்.
ஜம்மு வழியாக, பஞ்சாப் சிந்து மாகாணத்துக்குச் செல்ல காஷ்மீரில் இருந்து காந்திஜி கிளம்பினார். இதற்கிடையே ஆகஸ்ட் 5ம் தேதி, ஸ்ரீ குருஜியும் சிந்து மாகாணத்துக்குப் பயணம் மேற்கொள்ள முடிவு செய்திருந்தார்.
பஞ்சாப் மாகாணத்தில், லியால்பூரில் ஜரன்வாலா கிராமத்தில், சர்தார் கர்த்தார் சிங் அரண்மனை உட்பட மொத்த கிராமமே இஸ்லாமியர்களால் தீவைத்துக் கொளுத்தப்பட்டது. ஆகஸ்ட் 4 ஆம் தேதி, இஸ்லாமியர்களால் கட்டவிழ்த்து விடப் பட்ட பயங்கரவாத தாக்குதலில் இந்துக்களும் சீக்கியர்களும் ஈவு இரக்கமின்றி கொல்லப் பட்டனர். இந்துப் பெண்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் வன்முறைக்கு ஆளாகிச் செய்து எரித்துக் கொல்லப் பட்டனர்.
உயிர் மட்டுமே மிச்சமுள்ள, சில ஆயிரக்கணக்கான இந்துக்கள், அடைக்கலமாக எப்படி இந்தியா திரும்புவது என்பது பற்றி மட்டுமே யோசித்துக் கொண்டிருந்தார்கள்.