அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாகக் கைது செய்யப்பட்ட 5 காவலர்களிடம் சிபிஐ அதிகாரிகள் 2-வது நாளாக தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார், கடந்த ஜூன் 28-ம் தேதி நகை காணாமல் போன வழக்கில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியபோது அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தனிப்படை காவலர்கள் கண்ணன், ராஜா, ஆனந்த் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த கொலை வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில், வழக்கு விசாரணை மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து சிபிஐ மனுவை ஏற்றுக் கைது செய்யப்பட்ட காவலர்கள் 5 பேரையும், 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதனடிப்படையில் நேற்று மதுரை சிபிஐ அலுவலகத்தில் வைத்து காவலர்கள் 5 பேரிடமும் சிபிஐ அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் தனிப்படை காவலர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. குறிப்பாகச் சம்பவம் நடந்த ஜூன் 27 மற்றும் 28-ம் தேதிகளில் நடந்த நிகழ்வுகள் குறித்தும், அவர்களின் செல்போன் அழைப்புகள் தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டது. மற்றொருபுறம் இந்த வழக்கில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி சண்முக சுந்தரத்திடமும், காவலர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.