சீனாவில் சரிந்து வரும் பிறப்பு விகிதத்தை உயர்த்த அந்நாடு படாதபாடு பட்டு வருகிறது. மேலும், குழந்தைகள் பெற்றுக்கொள்ளக் கோடிகளைக் கொட்டி பெற்றோர்களை ஊக்குவித்து வருகிறது. இது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.
உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியில் சீனா 2வது இடத்தில் உள்ளது. இன்றைய தேதிக்கு அந்நாட்டில் சுமார் 141 கோடி மக்கள் உள்ளன. மக்கள் தொகையில் சீனா முதலிடத்தில் இருந்தபோது, பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டது. மக்கள் தொகை அதிகரிப்பதைக் கட்டுப்படுத்தியே ஆக வேண்டும் என்ற நிலைமைக்கும் தள்ளப்பட்டது.
எனவே, ஒரு குழந்தை கொள்கையை அந்நாடு அறிவித்தது. அதன்படி, ஒரு தம்பதி ஒரு குழந்தைதான் பெற்றுக்கொள்ள வேண்டும். மீறி 2வது முறை கருத்தரித்தால், கடுமையான அபராதம் விதிக்கப்படும். கட்டாய கருக்கலைப்பு, கருத்தடை உள்ளிட்டவையும் செய்யப்படும். ஆனால், இதெல்லாம் 10 ஆண்டுகளுக்கு முன்பு வரைதான்.
தற்போது நிலைமையே வேறு. சீன அரசு, தனது குடிமக்களிடம், “எத்தனை குழந்தைகளை வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளுங்கள். குறைந்தது ஒரு குழந்தையையாவது பெற்றுக்கொள்ளுங்கள். ப்ளீ்ஸ்” எனக் கெஞ்சி வருகிறது. ஆனால், சீன மக்கள் அதற்கெல்லாம் செவி சாய்ப்பதாகத் தெரியவில்லை.
விளைவு, சீனாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிர்ச்சியூட்டும் வகையில் குறைந்து வருகிறது. இப்படியே சென்றால் எதிர்காலத்தில் இளைஞர்களின் எண்ணிக்கை ஒட்டுமொத்தமாகச் சரிந்துவிடும். முதியவர்கள் மட்டுமே அங்கு அதிக எண்ணிக்கையில் இருக்கும் நிலைமை ஏற்படும். இதற்கான அறிகுறிகள் தற்போதே தென்படத் தொடங்கிவிட்டன. தொடர்ந்து மூன்றாவது ஆண்டாகச் சீனாவில் மக்கள் தொகை குறைந்துள்ளது.
எனவே, நாட்டு மக்களைக் குழந்தைகள் பெற்றுக்கொள்ளச் செய்யும் வகையில் சீன அரசு, பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்தது. பல்வேறு சலுகைகளையும் அறிவித்தது. ம்ஹூம்.. சீன மக்கள் அப்போதும் அசைந்து கொடுக்கவில்லை.
எனவே, குழந்தை பெற்றுக்கொண்டால் மானியம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மூன்று வயதுக்குட்பட்ட ஒவ்வொரு குழந்தைக்கும் ஆண்டுதோறும் தலா 44 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2 கோடி தம்பதிகளுக்கு இந்த மானிய தொகையை வழங்க சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாயைச் சீன அரசு செலவிட உள்ளது. இதன் மூலம் குழந்தை வளர்ப்புக்கு அதிக தொகை செலவிடும் நாடுகளில் ஒன்றாகச் சீனா உருவெடுத்துள்ளது. இந்த இடத்தில் ஒரு கேள்வி எழலாம். சீன மக்கள் ஏன் குழந்தை பெற்றுக்கொள்ள ஆர்வம் காட்ட மறுக்கிறார்கள் என்று?.
வேலைப்பளு, வேலையின்மை, அதிக வீட்டு வாடகை, அதிகரிக்கும் கல்வி செலவு, தனிப்பட்ட சுதந்திரம் என பல்வேறு காரணங்களை அவர்கள் பட்டியலிடுகின்றனர். ஒரு குழந்தையை வளர்த்து ஆளாக்க லட்சக்கணக்கில் செலவாகும் எனவும், அரசு வழங்கும் 44 ஆயிரம் ரூபாய்க்காக எல்லாம் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது எனவும் சீன இளைஞர்கள் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.
இருந்தாலும், தனது முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல, சீனா அரசு தன்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.