விரைவில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா விளங்கும் என்று உலக வங்கி உட்படச் சர்வதேச பொருளாதார வல்லுநர்கள் கூறிவரும் நிலையில், இந்தியாவை ஒரு ‘Dead Economy’ என்று அமெரிக்க அதிபர் கூறியுள்ளார். ஆனால், அந்த ‘Dead Economy’ நாட்டில் தான் தனது குடும்ப வணிகத்தை மிகப் பெரிய அளவில் விரிவுபடுத்திவருகிறார் ட்ரம்ப். இந்தியாவில் ட்ரம்பின் தொழில் முதலீடுகள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்.
Trump Organization என்ற வணிக சாம்ராஜ்யம் நியூயார்க்கை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. நியூயார்க்கின் மையப் பகுதியில் இருக்கும் இந்த நிறுவனம் ஒரு தனியார் அமெரிக்கக் கூட்டு நிறுவனமாகும். இது அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வணிக நலன்களுக்கான ஒரு முதன்மை ஹோல்டிங் நிறுவனமாகச் செயல்பட்டு வருகிறது. 1927ம் ஆண்டு, ட்ரம்பின் பாட்டி மற்றும் தந்தையால் தொடங்கப்பட்ட எலிசபெத் டிரம்ப் & சன் என்ற நிறுவனம், 1971-ல் ட்ரம்ப் கைக்கு வந்தவுடன் Trump Organization எனப் பெயர் மாற்றப் பட்டது.
ரியல் எஸ்டேட், கோல்ஃப் ரிசார்ட்டுகள்,உயர் ரக கிளப்கள் எனப் பல துறைகளில் ஈடுபடும் Trump Organization அமெரிக்கா மற்றும் சர்வதேச அளவில் ஆடம்பர குடியிருப்பு கோபுரங்கள், ஹோட்டல்கள் மற்றும் வணிக சொத்துக்களைச் சொந்தமாக வாங்கிக் குவித்திருக்கிறது.
இந்த வியாபார பின்னணி கொண்ட அமெரிக்க அதிபர் தான், கடந்த 10 ஆண்டுகளாக, தனது குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ள Trump Organization மூலம், அமெரிக்காவுக்கு வெளியே அதன் மிகப்பெரிய சந்தையாக இந்தியாவில் முதலீடு செய்து வருகிறது.
முதன்முதலாக 2012 ஆம் ஆண்டு 3 மில்லியன் சதுர அடியில் இந்தியாவுக்குள் கால் பதித்த ட்ரம்ப் நிறுவனம், இன்றைக்குச் சுமார் 11 மில்லியன் சதுர அடியாகத் தனது வணிகத்தை விரிவுப்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு வரை, முன்னணி கட்டுமான நிறுவனங்களுடன் பல ஒப்பந்தங்களை ஏற்படுத்திய ட்ரம்ப் நிறுவனம், மும்பை, புனே, கொல்கத்தா மற்றும் குருகிராமில் சுமார் ஏழு ப்ராஜெக்ட்-களில் இருந்து குறைந்தது 175 கோடி ரூபாய் லாபம் ஈட்டியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த நவம்பர் மாதம், அமெரிக்காவின் 47வது அதிபராக ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்ட உடனேயே, அவரது நிறுவனம், இந்தியாவின் Tribeca Developers என்ற நிறுவனத்துடன் சேர்ந்து, குருகிராம், புனே, ஹைதராபாத், மும்பை, நொய்டா மற்றும் பெங்களூருவில் குறைந்தது ஆறு ப்ராஜெக்ட்களை அறிவித்தது. இது ட்ரம்பின் வியாபார வளர்ச்சியில், இந்தியாவில் மேலும் 8 மில்லியன் சதுர அடியைச் சேர்த்துள்ளது.
இதன் மூலம், அமெரிக்காவில் உள்ள ட்ரம்ப் டவர்களை விட பத்து ட்ரம்ப் டவர்களின் தாயகமாக இந்தியா மாறி உள்ளது. ட்ரம்பின் நிறுவனத்தின் இந்த விரிவாக்கம், ஆடம்பர ரியல் எஸ்டேட்டுக்கான இலாபகரமான சந்தையாக இந்தியாவின் திறனை எடுத்துக்காட்டியுள்ளது.
இந்தியாவின் வளர்ந்து வரும் பொருளாதாரத்தின் மீதான ட்ரம்பின் ஆர்வத்தையே இது வெளிக்காட்டுகிறது. இந்த சொகுசு அடுக்குமாடிக் குடியிருப்புகளின் விலைகள் 6 கோடியில் தொடங்கி 25 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இது அதிக நிகர மதிப்புள்ள தனிநபர்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆகியோரைக் குறிவைத்து நடக்கும் வியாபாரமாகும். இந்த ஆடம்பரக் குடியிருப்புகளின் ஒருங்கிணைந்த விற்பனை மதிப்பு 7,500 கோடி ரூபாயை எட்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
குருகிராமில் உள்ள தங்கள் அதி-ஆடம்பர டிரம்ப்-பிராண்டட் குடியிருப்பு திட்டத்தில் 298 யூனிட்களையும் ட்ரம்ப் நிர்வாகம் வெற்றிகரமாக விற்றுள்ளன. ட்ரம்ப் நிறுவனத்தின் இந்த நடவடிக்கை, இந்தியாவில் முதலீடு செய்வது நம்பிக்கைக்கு உரியதாக உள்ளது என்பதையே படம்பிடித்துக் காட்டுகிறது.
இந்தியாவில் முதலீடு செய்து, தன் சொந்த அனுபவத்தின் மூலம் அதிக அளவில் லாபம் பார்த்த அதிபர் ட்ரம்ப், இந்தியப் பொருளாதாரம் ஒரு ‘Dead Economy’ என்று சொல்லியிருப்பது நகைப்புக்குரியதாக உள்ளது.