20 வயது இளைஞர் ஒருவர் உலகின் மிகச் சிறிய நாடு ஒன்றை உருவாக்கி, அதிபராகப் பொறுப்பேற்றுள்ளதாக அறிவித்துள்ளார். யார் அந்த இளைஞர்? எங்கே உள்ளது அந்த புதிய நாடு? விரிவாகப் பார்க்கலாம்.
ஐரோப்பிய நாடுகளான குரோஷியாவிற்கும் செர்பியாவிற்கும் இடையே உள்ளது இந்த மிகச்சிறிய நிலப்பரப்பு. இதன் மொத்த பரப்பே 125 ஏக்கர்தான். டானூப் ஆற்றின் குறுக்கே உள்ள இந்த நிலம் குரோஷியாவிற்குச் சொந்தமா?, செர்பியாவிற்கு சொந்தமா? என்பதில் பல ஆண்டுகளாகவே குழப்பம் நிலவி வருகிறது.
இந்த குழப்பத்தை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட இளைஞர் ஒருவர், அந்த நிலத்தைத் தனி நாடாக அறிவித்துள்ளார். மேலும், புதிய நாட்டின் அதிபராகவும் தன்னை அறிவித்துக்கொண்டுள்ளார். இத்தனைக்கும் அந்த இளைஞருக்கு வெறும் 20 வயதுதான். அவரது பெயர் டேனியல் ஜாக்சன்.
அந்த 125 ஏக்கர் நிலம் சர்ச்சைக்குரிய பகுதியாக இருப்பதை, தனது 14 வயதில் டேனியல் அறிந்தார். கேட்பாரற்ற இந்த நிலத்தைத் தனி நாடாக மாற்றினால் எப்படி இருக்கும் என்ற எண்ணம் அப்போதே அவருக்குத் தோன்றியுள்ளது. இதனைத் தனது நண்பர்களிடம் அவர் தெரிவிக்கவே, அவர்களும் இந்த யோசனையால் கவரப்பட்டனர். இதனை அறிந்த பலரும், பொடி பையன் ஏதோ விளையாட்டுத்தனமாகப் பேசிக்கொண்டிருக்கிறான் என்று நினைத்தனர்.
ஆனால், தனது திட்டத்தில் டேனியல் உறுதியாக இருந்தார். அதன் வெளிப்பாடாக, 2019ஆம் ஆண்டு மே 30ம் தேதி, அந்த சர்ச்சைக்குரிய 125 ஏக்கர் நிலத்தைத் தனி நாடாக அறிவித்தார். அதற்கு வெர்டிஸ் சுதந்திரக் குடியரசு எனவும் பெயரிட்டார். நாட்டிற்குப் பெயர் வைத்தால் போதுமா? தனி கொடி, சட்டங்கள், அமைச்சரவை, தனி நாணயம் உள்ளிட்டவை வேண்டாமா?
எனவே, அதற்கான வேலைகளை டேனியல் தொடங்கினார். அனைத்து பணிகளும் முடிவடைந்ததை அடுத்து, அது குறித்த அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளார். வெர்டிஸ் நாட்டின் அதிகாரப்பூர்வ மொழிகளாக ஆங்கிலம், குரோஷியன், செர்பியன் ஆகியவை இருக்கும் எனவும், யூரோ தேசிய நாணயமாகப் பயன்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார். தனது நாட்டிற்கான தனிக் கொடியையும் அவர் வெளியிட்டுள்ளார்.
மேலும், தனி அரசமைப்பு சட்டத்தை உருவாக்கியுள்ள அவர், சர்ச்சைக்குரிய நிலப்பரப்பில் வசிக்கும் 400 பேரை தனது குடிமக்களாக அறிவித்துள்ளார். அவர்களுக்குத் தனி பாஸ்போர்ட் வழங்கி, பலரையும் அவர் அதிர வைத்துள்ளார்.
தனது நாட்டிற்கு உலக நாடுகளின் அங்கீகாரத்தைப் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், தற்போது குரோஷியா மற்றும் செர்பிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் டேனியல் தெரிவித்துள்ளார்.