கோபிசெட்டிப்பாளையம் அருகே கள்ளநோட்டுகளைப் புழக்கத்தில் விட்ட வழக்கில் தலைமறைவாக இருந்தவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் அருகே அக்கரை கொடிவேரி பாலம் பகுதியில் கடந்த ஜூன் 14ம் தேதி போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றனர்.
அவர்களைத் துரத்திச் சென்ற போலீசார் இருவரில் பாஸ்கர் என்பவரை பிடித்து விசாரித்தனர். அப்போது தனக்குப் பணக்கஷ்டம் இருப்பதாக தப்பியோடிய லோகேஷிடம் கூறியதால் கள்ளநோட்டுகளைப் புழக்கத்தில் விட்டு மாற்றிக் கொடுத்தால் மூன்றில் ஒரு பங்கு கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறியதாக பாஸ்கரன் தெரிவித்தார்.
இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் 3 லட்சத்து 92 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர். தலைமறைவான லோகேஷை போலீசார் தேடி வந்த நிலையில் கோபிசெட்டிபாளையம் குற்றவியல் நீதிமன்றத்தில் அவர் நேற்று சரணடைந்தார்.