இந்தியா – சீனா எல்லையான அக்சாய் சின் பகுதியை எளிதாக நெருங்கும் வகையில் சீனா மிகப்பெரிய ரயில்வே திட்டத்தைச் செயல்படுத்த முடிவு செய்துள்ளது. சீனாவின் இந்த புதிய திட்டம் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகப் பார்க்கப்படுகிறது..
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்சனை நிலவி வருகிறது. இந்தியப் பகுதிக்குள் அவ்வப்போது சீனா அத்துமீறி சாலை அமைப்பதற்கும், உள்கட்டமைப்பு பணிகள் செய்ய முயற்சிப்பதற்கும் இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இந்தியாவின் அருணாசலப் பிரதேசத்தை தங்கள் நாட்டின் ஒரு பகுதி எனக் கூறும் சீனா, லடாக் பகுதியிலும் தொடர்ந்து அத்துமீறி வருகிறது.
இந்தநிலையில், உலகத்தின் கூரையான திபெத்தின் ஒவ்வொரு பகுதியையும், தங்கள் நாட்டுடன் நெருக்கமாக இணைக்கச் சீனா திட்டமிட்டு, அதற்கான முன்னெடுப்புகளை தொடங்கியுள்ளது. அதன்படி திபெத்தை சீனாவின் வடக்குப் பகுதியான ஷின்ஜியாங் உடன் இணைக்கும் மிகப்பெரிய ரயில்வே திட்டத்தைச் சீனா கையில் எடுத்துள்ளது. ஷின்ஜியாங்கில் உள்ள ஹோடன் பகுதியில் இருந்து திபெத்தில் உள்ள லாசா பகுதியை இணைக்கும் இந்த திட்டம், உண்மையில் சீன ரயில்களை இந்தியாவின் நுழைவு வாயிலான அக்சாய்சின் வழியாகக் கொண்டு செல்லும் வகையில் அமையக் கூடும் என்று கருதப்படுகிறது.
இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்த அக்சாய் சின், 1962 ஆண்டு சீனப்போரின்போது சீனாவின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியாக மாறியது. மாவோவின் சீனா என்ற மெகா-உள்கட்டமைப்பு திட்டத்தை முன்னோடியாகக் கொண்டு, அக்சாய் சின் வழியாக மேற்கொள்ளப்படும் இந்த ரயில் பாதை சீனாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அக்சாய்சின் பகுதியையொட்டி, கடந்த 1950-ம் ஆண்டு G219 – என்ற சாலையைச் சீனா அமைத்திருந்தது. தற்போது அதே பகுதியில் ரயில் பாதைகளை அமைப்பது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகப் பார்க்கப்படுகிறது.
இதேபோன்று அருணாச்சல பிரதேசத்தையொட்டி அமைக்கப்பட்டுள்ள லாசா – நியிஞ்சி ரயில் பாதையைச் சீனாவின் மேற்குப்பகுதியில் உள்ள ராணுவ தளமான செங்டு பகுதியுடன் இணைக்கச் சீனா திட்டமிட்டுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு டோக்லாம் மோதல் ஏற்பட்ட சர்ச்சைக்குரிய சும்பி பள்ளத்தாக்கை இணைக்கும் வகையிலும், நேபாள எல்லையை இணைக்கும் வகையிலும், ரயில் பாதைகளை அமைக்கச் சீனா ஆர்வம் காட்டி வருகிறது.
இந்திய எல்லையை நோக்கி சீன துருப்புகளை எளிதாக அனுப்பவும், ராணுவத் தளவாடங்களை எல்லையை நோக்கி வேகமாக நகர்த்தவும் இந்த ரயில் பாதைகள் உதவும் என்று கருதப்படுகிறது. எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியையொட்டி சீனா மேற்கொண்டு வரும் உட்கட்டமைப்பு பணிகள் இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறி வரும் நிலையில், இந்தியாவும் தக்க பதிலடி கொடுக்கும் வகையில் திட்டங்களை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.