மக்கள் நலனின் குரலாகத் தொகுதிதோறும் தேசிய ஜனநாயகக் கூட்டணி செயல்படும் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
₹170 கோடி செலவில் நடைபெற்றதாகக் கணக்கு காட்டப்பட்ட பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் மூன்றாண்டுகளாகியும் முறையாக நடைமுறைக்கு வராதது துவங்கி, குண்டும் குழியுமான சாலைகள், சேறும் சகதியுமான சந்தைகள், குப்பைக் குளமான தெருக்கள் எனப் பல்வேறு சீர்கேடுகளில் சிக்கித் தவித்து வருகிறது பொள்ளாச்சி.
ஆனால், இவற்றையெல்லாம் தனது அலட்சியத்தால் கண்டுகொள்ளாததோடு, வரிகளை உயர்த்துவது, வரிவசூலில் முறைகேடு புரிவது என்பது போன்ற அராஜகப் போக்கில் ஈடுபடும் திமுக அரசைக் கண்டித்து தமிழக பாஜக மற்றும் அதிமுக சார்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
திராவிட மாடலின் திறனற்ற நிர்வாகத்தை எதிர்த்தும், பொள்ளாச்சி வாழ் மக்களின் உரிமைக் குரலாக ஒலிக்கும் விதமாகவும் சிறப்பாக போராட்டத்தை முன்னெடுத்த தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களான பொள்ளாச்சி அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்வி. ஜெயராமன் கிணத்துகடவு அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்.
தாமோதரன், அஇஅதிமுக நகரத் தலைவர் திரு. கிருஷ்ணகுமார் அவர்கள், நமது பாஜக கோவை தெற்கு மாவட்டத் தலைவர் திரு. சந்திரசேகர், முன்னாள் கோவை தெற்கு மாவட்டத் தலைவர் வசந்தராஜன் ஆகிய அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.
தமிழகத்தை சீர்குலைக்கும் திமுக அரசை எதிர்த்து இன்று பொள்ளாச்சியில் நடைபெற்ற ஆர்பாட்டம் வெறும் ஆரம்பப் புள்ளியே!, இதே போன்று தொடர்ந்து பல அறவழிப் போராட்டங்களின் வழி தமிழகத்தின் ஒவ்வொரு தொகுதியிலும் திமுக அரசால் மக்கள் எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சனைகளும் வெளிக்கொணரப்படும்.
மக்கள் நலனின் குரலாகத் தொகுதிதோறும் தேசிய ஜனநாயகக் கூட்டணி செயல்படும். முன்னேற்றத்தைத் தடுக்கும் மக்கள் விரோத திராவிட மாடல் அரசை ஒட்டுமொத்தமாக அகற்றும் வரை எங்கள் கூட்டணி அயராது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.