கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவைச் சுரண்டுவதை அடியோடு எதிர்த்த வீரத் தமிழ் மன்னர்களில் தீரன் சின்னமலை முதன்மையானவர். விடுதலை போரில் விடிவெள்ளியாக திகழ்ந்த சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை பற்றிப் பார்க்கலாம்.
1756ம் ஆண்டு ஏப்ரல் 17 ஆம் தேதி, ஈரோடு மாவட்டம் காங்கேயம் அருகிலுள்ள மேலப்பாளையத்தில் பிறந்த தீரன் சின்னமலைக்குப் பெற்றோர் வைத்த பெயர் தீர்த்தபதி.
தீர்த்தபதியின் வழியாக மைசூருக்கு எடுத்துச் செல்லப்பட்ட கொங்கு நாட்டின் வரிப்பணத்தைப் பறித்து ஏழை மக்களுக்குக் கொடுத்தார்.
சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையே ஒரு சின்னமலை வரிப்பணத்தைப் பறித்துவிட்டதாக ஹைதர் அலியிடம் போய்ச் சொல் எனத் தண்டல் காரனை அடித்து துரத்தினார். அன்று முதல், தீர்த்தபதி கவுண்டர், தீரன் சின்னமலை என்று பெயர் பெற்றார்.
ஆங்கிலேயர்களை எதிர்க்க, தீரன் சின்னமலையும் திப்புச் சுல்தானும் ஒன்றாகச் சேர்ந்தனர். மைசூர் போர்களில் தீரன் சின்னமலை, பிரிட்டிஷ் படைகளைத் தோற்கடித்தார்.
திப்பு சுல்தான் மரணத்துக்குப் பிறகு அரச்சலூர் அருகே ஓடாநிலையில் கோட்டை ஒன்றைக் கட்டிய தீரன் சின்னமலை, ஆங்கிலேயரை எதிர்ப்பதற்காக சிவன்மலை அருகே இளைஞர்களுக்கு ஆயுதப்பயிற்சி அளித்தார். ஆங்கிலேயர்களுக்கு எதிராக, நாட்டில் உள்ள பாளையக்காரர்களை எல்லாம் ஓரணியில் திரட்டினார்.
தென்னிந்தியப் பாளையக்காரர்களை அடிமைப்படுத்த வெள்ளையர்கள் திட்டம் தீட்டிய கோவைக் கோட்டையைத் தகர்க்க தீரன் சின்னமலை திட்டமிட்டார். இதில் தீரன் சின்னமலை தோல்வி அடைந்தார்.
1801 ஆம் ஆண்டு பவானி – காவிரிக்கரையில் நடந்த போரில் வெற்றிப் பெற்றார். 1802 ஆம் ஆண்டு சென்னிமலைக்கும் சிவன் மலைக்குமிடையே நடந்த போரில் பிரிட்டிஷ் படையைத் தோற்கடித்தார். 1803 ஆம் ஆண்டு அரச்சலூர் போரிலும் தீரன் சின்னமலை வெற்றிப் பெற்றார்.
போர்க்களத்தில் வெல்ல முடியாத ஆங்கிலேயர்கள், 1805 ஆம் ஆண்டு, சூழ்ச்சியால் தீரன் சின்னமலையையும் அவரது சகோதரர்களையும் கைது செய்து சங்ககிரியில் உள்ள மலைக்கோட்டையில் தூக்கிலிட்டனர்.