குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்களுக்கு கால அவகாசம் விதிக்க நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இல்லை என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு 3 மாத காலக்கெடு விதித்ததற்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்மனு தாக்கல் செய்தது.
அதில், குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்களுக்கு காலக்கெடு விதிக்க நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இருவரும் ஜனநாயக அமைப்பின் உயர்பதவிகள் எனவும் அவர்களுக்கு கால அவகாசம் விதிப்பது அந்த பதவிகளின் கண்ணியத்தைக் குறைக்கும் எனவும் கூறியுள்ளது.
இந்த விஷயங்களில் நீதிமன்றங்கள் தலையிட்டால் அரசியலமைப்பில் பெரும் குழப்பத்திற்கு வழிவகுக்கும் என சுட்டிக்காட்டியுள்ள மத்திய அரசு, நீதிமன்றங்கள் தங்கள் அதிகாரங்களில் தலையிடுவது சரியான அணுகுமுறை அல்ல எனவும் குறிப்பிட்டுள்ளது.
மசோதா விவகாரத்தை அரசியல் ரீதியாகவும், அரசியலமைப்பு முறையிலும் தீர்க்க வேண்டுமே தவிர நீதிமன்ற தலையீட்டைக் கொண்டு தீர்க்கக் கூடாது எனவும் தெரிவித்துள்ளது.