வாக்கு திருட்டு என்று கூறுவது உண்மைக்கு புறம்பானது என்று இந்திய தேர்தல் ஆணையம் கண்டித்துள்ளது.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி, தேர்தல் ஆணையம் முறைகேடாக போலி வாக்காளர்களை, வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதாக பகிரங்கமாக குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது ராகுல்காந்தியின் குற்றச்சாட்டை மறுத்த அவர், ஆளுங்கட்சியோ, எதிர்கட்சியோ தேர்தல் ஆணையத்திற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றுதான் என தெரிவித்தார்.
யார் எந்தக் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும், தேர்தல் ஆணையம் தனது கடமையில் இருந்து பின்வாங்காது என்றும் உறுதிபடக் கூறினார்.
பீகார் வாக்காளர் பட்டியல் விவகாரத்தில் பொய்கள் பரப்பப்படுவதாகக் கூறிய தேர்தல் ஆணையர், வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகள் அரசியலமைப்பை அவமதிக்கும் செயல் என்று கண்டித்தார்.
மக்களவை தேர்தலில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பணியாளர்கள், 10 லட்சம் பூத் ஏஜென்டுகள், 20 லட்சம் வாக்குச்சாவடி முகவர்கள் ஈடுபட்டுள்ளனர் என்றும்,
மக்கள் முன்பு வெளிப்படைத்தன்மையுடன் தேர்தல் பணிகள் நடைபெறும் நிலையில், வாக்கு திருட்டு எவ்வாறு நடைபெறும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
வாக்காளர்கள் தவறாக வழிநடத்தப்படுவதை தேர்தல் ஆணையம் அனுமதிக்காது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
சிறப்பு திருத்த வாக்காளர் பட்டியலில் இருந்து ஒருவேளை வாக்காளர்கள் நீக்கப்பட்டால், தகுந்த ஆவணங்களை கொடுக்கும் பட்சத்தில் மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்படுவார் என்றும் கூறினார்.