காங்கிரஸ் தலைவர்கள் தங்களை சமூக நீதி பாதுகாவலர்களை போல் முன்னிறுத்திக்கொள்ள முயற்சிப்பதாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
துவாரகா விரைவுச் சாலையின் 10 கிலோ மீட்டர் நீளமுள்ள டெல்லி பிரிவு சுமார் 5 ஆயிரத்து 360 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. இதேபோல் பகதூர்கர் மற்றும் சோனிபட்டிற்கான புதிய இணைப்பு சாலை சுமார் 5 ஆயிரத்து 580 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த 2 தேசிய நெடுஞ்சாலை திட்டங்களையும் பிரதமர் மோடி மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், காங்கிரஸ் தலைவர்கள் தங்களை சமூக நீதி பாதுகாவலர்களை போல் முன்னிறுத்திக்கொள்ள முயற்சிப்பதாக விமர்சித்தார். சமூக நீதியை ஒடுக்கிய சட்டங்கள் பாஜக ஆட்சியில் தான் அகற்றப்பட்டதாகவும் அவர் விளக்கமளித்தார். பாஜகவை பொறுத்தவரை சீர்திருத்தம் என்பது, நல்லாட்சியின் விரிவாக்கம் என்றும் அவர் கூறினார். மேலும் ஜிஎஸ்டியில் சீர்திருத்தம் நடக்க உள்ளதாக கூறிய பிரதமர் மோடி, இதன் மூலம் தீபாவளிக்கு, மக்கள் இரட்டை போனஸை பெற உள்ளதாக தெரிவித்தார்.
முன்னதாக நெடுஞ்சாலை திட்டங்களை தொடங்கி வைக்க வந்த பிரதமர் மோடி ரோடு ஷோ நடத்தினார். அப்போது வழி நெடுகிலும் காத்திருந்த மக்கள் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.