குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, இபிஎஸ் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டதில் மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்
அர்ப்பணிப்பு, பணிவு மற்றும் அறிவுத்திறனால் பொதுவாழ்வில் நீண்ட காலம் தன்னை வேறுபடுத்திக் காட்டியுள்ளார் எனவும்
சமூக சேவை மற்றும் விளிம்புநிலை மக்களுக்கு அதிகாரம் அளிப்பதில் கவனம் செலுத்தியுள்ளார் எனவும் புகழாரம் சூட்டியுள்ளார்.
தமிழ்நாட்டில் அடிமட்ட நிலையில் சி.பி.ராதாகிருஷ்ணன் விரிவான பணிகளை மேற்கொண்டுள்ளார் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ள பதிவில், நாடாளுமன்ற உறுப்பினராகவும், பல்வேறு மாநிலங்களின் ஆளுநராகவும் சி.பி.ராதாகிருஷ்ணன் செய்த பணி, அரசியலமைப்பு கடமைகளை திறம்பட நிறைவேற்றுவதில் குறிப்பிடத்தக்க பங்கு வகிப்பதாக கூறியுள்ளார்.
பரந்த அனுபவமும் ஞானமும் மேல்சபையின் கௌரவத்தை உயர்த்தும் எனவும் புதிய மைல்கற்களை தொடும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி எனக் கூறியுள்ளார்.
அரசியல் மற்றும் அரசாங்க பொறுப்புகளின் வாயிலாக மக்கள் பணிகளை செய்து வருகிறார் எனவும், அவரது மேன்மையான பணிகள் தொடர்ந்திட வாழ்த்துகள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில், சி.பி. ராதாகிருஷ்ணனின் பொது சேவைக்கும், மக்கள் மீதான அர்ப்பணிப்புமிக்க சமூக செயற்பாடுகளுக்கும் கிடைத்த மணிமகுடம் என தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரை குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவித்த பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவிற்கு நன்றி எனவும் கூறியுள்ளார்.
பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், தமிழக பாஜக தலைவராகவும், எம்பியாகவும், சி.பி.ராதாகிருஷ்ணன் செய்த மக்கள் பணிகள் போற்றுதலுக்குரியவை என தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா ஆளுநராக, வெகுசிறப்பாக பணியாற்றிய பெருமைக்குரியவர் சி.பி.ராதாகிருஷ்ணன் என குறிப்பிட்டுள்ள அண்ணாமலை
குடியரசுத் துணைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் சிறப்பாக மாநிலங்களவையை வழிநடத்துவார் எனவும் உறுதிபட தெரிவித்துள்ளார்.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆரம்பக் கட்டத்தில் இருந்தே மக்களின் நலனையும் தேசியவாதத்தையும் முன்னிலைப்படுத்தி அயராது உழைத்தவர் சி.பி.ராதாகிருஷ்ணன் என புகழாரம் சூட்டியுள்ளார்.
அரசியல் பணிகளைத் தாண்டி எளிமை, ஒழுக்கம், பொதுமக்களோடு கொண்டிருக்கும் ஆழ்ந்த பிணைப்பு ஆகிய சிறந்த குணங்கள்தான் அவரை தலைசிறந்த மக்கள் தலைவராக உயர்த்தி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அப்துல் கலாமை குடியரசுத் தலைவராக 2வது முறையாக முன்மொழிய விழைந்த NDA முயற்சியை முறியடித்தது காங்கிரஸ்- திமுக கூட்டணி வரலாற்றுப் பிழையைச் செய்ததாகவும் சாதனைத் தமிழர்களை உயர்த்திப் பிடிப்பதில் என்றும் பாஜகதான் முன்னோடி என்பது மீண்டுமொரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும், தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற பாஜகவினர் இன்று கோயில்களுக்கு சென்று சிறப்பு பிரார்த்தனை செய்யுமாறும் நயினார் நாகேந்திரன் அறிவுறுத்தியுள்ளார்..