990 அடி உயரம்கொண்ட ஒரு ஸ்டேடியம் அளவிலான சிறுகோள் மணிக்கு 21 ஆயிரத்து 994 மைல் வேகத்தில் பூமியை நோக்கி வந்துகொண்டிருப்பதாக நாசா தெரிவித்துள்ளது. இது பற்றி சற்று விரிவாகப் பார்க்கலாம் இந்த தொகுப்பில்.
நமது சூரியக் குடும்பம், பில்லியன் கணக்கான ஆண்டுகளாக பல்வேறு விண்வெளிப் பொருட்களால் நிரம்பியுள்ளது. இவற்றுள் குறிப்பிடத்தக்கதான சிறுகோள்கள் என்பவை சூரியனைச் சுற்றி வரும் பாறைத் துண்டுகளாகும்.
இவை நமது சூரியக் குடும்பத்தின் ஆரம்பக் காலம் பற்றிய விலைமதிப்பற்ற தகவல்களை தருவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், 1997 QK1 எனப் பெயரிடப்பட்ட ஒரு சிறுகோள், பூமியை நோக்கி வேகமாக வந்துகொண்டிருப்பதை நாசா கண்டறிந்துள்ளது.
990 அடி உயரம் உள்ள இந்த சிறுகோள் ஒரு பெரிய ஸ்டேடியம் அளவில் இருப்பதாகவும், அது பூமியை நோக்கி மணிக்கு 21 ஆயிரத்து 994 மைல் வேகத்தில் வந்துகொண்டிருப்பதாகவும் நாசா தெரிவித்துள்ளது. இந்த சிறுகோள் வரும் ஆகஸ்ட் 20-ம் தேதி பூமியிலிருந்து சுமார் 1.87 மில்லியன் மைல் தொலைவில் கடந்து செல்லும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
விண்வெளி தரநிலைகளின்படி இது ஒப்பீட்டளவில் நெருக்கமாக இருந்தாலும், பூமிக்கு இந்த சிறுகோளால் எந்த வகையிலும் பாதிப்பில்லை என்பதை நாசா விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
பூமிக்குப் பாதிப்பில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தாலும், இந்த சிறுகோள் பயணிக்கும் பாதையானது விஞ்ஞானிகள் மூலம் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. சிறிய சுற்றுப்பாதை மாற்றங்கள் கூட சிறுகோளின் பாதையை மாற்றக்கூடும் என்பதால், சாத்தியமான அபாயங்களை முன்கூட்டியே கண்டறியும் பொருட்டு நாசா, இஸ்ரோ உள்ளிட்ட விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களால் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
ஏற்கனவே நாசா, ESA, JAXA ஆகிய விண்வெளி நிறுவனங்களுடன் இணைந்து, 2029-ம் ஆண்டு அப்போபிஸ் உள்ளிட்ட சிறுகோள்களை ஆராயும் திட்டங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. விண்வெளி ஒருகணம் அமைதியாகவும், மறுகணம் கணிக்க முடியாததாகவும் இருக்கும் என்பதால், விஞ்ஞானிகள் அடுத்து என்ன நடக்கக்கூடும் என்பதில் ஒவ்வொரு கணமும் விழிப்புடன் இருப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.