மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் உக்ரைன் போரை நிறுத்துவதற்கான முயற்சியில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். போர் முடிவுக்கு வருமா? அமைதிக்கான ஒப்பந்தம் ஏற்படுமா? உக்ரைனின் எதிர்காலம் எப்படி இருக்கும்? இந்தக் கேள்விகளுக்கு என்ன பதில் என்பது பற்றி இந்தச் செய்தி தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்.
2022-ல் உக்ரைன் மீதான ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பு முதல், நேட்டோ மற்றும் அதன் நட்பு நாடுகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உக்ரைனுக்கு ஆதரவாகக் களம் இறங்கியுள்ளன.
அதிபரானால் 24 மணி நேரத்துக்குள் உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதாகத் தேர்தல் பிரச்சாரத்தின் போது ட்ரம்ப் உறுதியளித்தார். இரண்டாவது முறை அதிபரான உடனேயே, வெள்ளை மாளிகையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து கடுமையாகப் பேச்சுவார்த்தை நடத்தினார். குறிப்பாக, மூன்றாம் உலகப் போருடன் ஜெலன்ஸ்கி சூதாட்டம் ஆடுவதாக ட்ரம்ப் குற்றம் சாட்டினார்.
உடனிருந்த அமெரிக்கத் துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸ், ஒரு முறையாவது அமெரிக்காவுக்கு நன்றி சொன்னீர்களா? என்று கேட்டு, ஜெலன்ஸ்கியை ஒரு நன்றி இல்லாதவராக உலகத்துக்குச் சுட்டிக் காட்டினார். உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முதல் சுற்றுப் பேச்சுவார்த்தைகள், சவூதி அரேபியாவில் நடந்தது. இதில் உக்ரைன் சார்பாகவும் ஐரோப்பிய யூனியன் சார்பாகவும் யாருக்கும் அழைப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து, பலமுறை ரஷ்ய அதிபர் புதினுடன் தொலைப்பேசியில் உரையாற்றிய ட்ரம்ப், கடந்த வாரம் அலாஸ்காவில் நேரில் புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அமைதி ஒப்பந்தமும் இல்லாமல்,போர் நிறுத்த அறிவிப்பும் இல்லாமல், எந்த முடிவும் இல்லாமலேயே அலாஸ்கா சந்திப்பு முடிந்தது.
முத்தரப்பு பேச்சுவார்த்தை விரைவில் நடக்கும் என்று தெரிவித்த ட்ரம்ப், வெள்ளை மாளிகையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியைச் சந்தித்துள்ளார். மேலும், ஐரோப்பிய ஆணையத் தலைவர், நேட்டோ பொதுச் செயலாளர், பிரிட்டிஷ் பிரதமர்,பிரான்ஸ் அதிபர்,ஜெர்மனி அதிபர், இத்தாலி பிரதமர், மற்றும் பின்லாந்து அதிபர் ஆகியோரையும் ட்ரம்ப் சந்தித்து உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து பேசசுவார்த்தைகள் நடத்தியுள்ளார்.
போர் நிறுத்தம் பற்றி ட்ரம்ப் பேசுகிறார் என்றால், மறுபுறம் உக்ரைன் போருக்கான மூலக் காரணங்கள் அகற்றப்படவேண்டும் என்பதில் புதின் உறுதியாக நிற்கிறார். அலாஸ்கா சந்திப்புக்கு முன்னதாக, அமைதிக்கான நிபந்தனையாக, ட்ரம்ப் “நில பரிமாற்றங்கள்” குறித்தும் கோடிட்டுக் காட்டினார்.
2014-ல் ரஷ்யா இணைத்த கிரிமியாவைத் திரும்பப் பெறுவதை உக்ரைன் கைவிட வேண்டும் என்றும், நேட்டோவில் ஒருபோதும் சேரக் கூடாது என்றும் ஜெலென்ஸ்கிக்குக் கூறப்பட்டுள்ளது. மேலும், கிழக்கு உக்ரேனில் உள்ள பகுதிகளான டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க், சபோரிஷியா மற்றும் கெர்சன் ஆகிய பகுதிகள் முழுவதையும் ரஷ்யாவுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என்று ஜெலென்ஸ்கிக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
லுஹான்ஸ்க்கை முழுமையாகத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ள ரஷ்யா, டொனெட்ஸ்கின் 30 சதவீத பகுதிகளையும், சபோரிஷியா மற்றும் கெர்சனில் 50 சதவீத நிலங்களையும் கைப்பற்றியுள்ளது. ஒரு துண்டு நிலத்தையும் விட்டுக்கொடுக்க முடியாது என்றும், அதற்கு உக்ரைன் அரசியல் அமைப்பில் இடமில்லை என்றும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இந்தப் பின்னணியில், போர் நிறுத்தத்துக்குப் பின் உக்ரைன் இரண்டாகப் பிளவுபடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. உக்ரைன் இன மக்கள் வாழும் மேற்கு உக்ரைன் என்றும், உள்ளடக்கிய ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனை உள்ளடக்கிய கிழக்கு உக்ரைன் உருவாகும் என்றும் அரசியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
கிராமப் புறங்களாக மேற்கு உக்ரைன் இருக்கும். மாறாக ரஷ்யாவின் பிடியில் உள்ள கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைன் நகர்ப்புறமாக இருக்கும். ரஷ்யாவின் கிழக்கு உக்ரைனை விட மேற்கு உக்ரைன் மிக ஏழ்மையானதாக இருக்கும்.
மேற்கு உக்ரைனின் பொருளாதார சக்தியான கியேவ் நகரம், ஒரு பிரிவினை ஏற்பட்டால் குறிப்பிடத்தக்க இடையூறுகளைச் சந்திக்கும் வாய்ப்புள்ளது. கியேவ் நகரம் இருக்கும் மேற்கு உக்ரைன், ஐரோப்பாவின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றாக இருக்கும் என்றும்,மறு சீரமைப்பு செய்வதற்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் உதவி மற்றும் ஏற்றுமதிக்கான திறந்த சந்தை நாட்டின் பொருளாதார எதிர்காலத்துக்கு மிக முக்கியமானதாக அமையும் என்றும் கணிக்கப் பட்டுள்ளது.
ஏராளமான எரிவாயு மற்றும் கனிம வளங்கள் நிறைந்த பகுதிகளை உள்ளடக்கிய தெற்கு மற்றும் கிழக்கு உக்ரைன் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருப்பதால் பிரகாசமான எதிர்காலத்துக்கான ஆற்றலைக் கொண்டுள்ளது. எளிதில் முழு உக்ரனையும் கைப்பற்ற வாய்ப்பும் ஆற்றலும் இருந்த போதிலும், ரஷ்யா மூன்று ஆண்டுகளாக, உக்ரைனை முற்றிலுமாக நிர்க்கதியாக நிற்க வைத்துள்ளது.
ரஷ்யாவின் அரசியல் கோரிக்கைகளை எதிர்க்க முடியாத அளவுக்குப் பலவீனமாக இருக்கும் உக்ரைன், நிலத்தை மட்டுமல்ல, இறையாண்மையையும் இழக்க வேண்டிய நிலையில் உள்ளது என்றே ராணுவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.