வரலாறு காணாத கனமழையில் சிக்கி சின்னாபின்னமான மும்பை மாநகரம், திரும்பும் திசையெல்லாம் வெள்ளக்காடாய் காட்சியளிக்கிறது. வர்த்தக நகரத்தில் பரபரப்பாய் ஓடிய மக்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கும் சூழல் நிலவுகிறது. இதுகுறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
மகாராஷ்டிராவில் 5 நாட்களாக முன்னெப்போதும் இல்லாத அளவுக்குக் கனமழை வெளுத்து வாங்குகிறது. தானே, ராய்காட், ரத்னகிரி, சித்தூர்க் நான்டெட் உள்ளிட்ட மாவட்டங்கள் மழையால் பலத்த சேதம் அடைந்திருக்க, தலைநகர் மும்பையின் நிலைமையோ அதோ கதியாக மாறியுள்ளது.
மும்பையின் பல்வேறு பகுதிகளிலும் மழையளவு 200 மில்லி மீட்டரை கடந்து பதிவாகியிருக்க, 24 மணி நேரத்தில் 255 மி.மீ மழை பொழிந்ததால், விர்க்ஹோலி பகுதியே தனிதீவாக காட்சியளிக்கிறது.
தாதர் நகரம், கிங் சர்க்கிள் மேம்பாலங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது. மழை மற்றும் வெள்ளநீரில் பலமணி நேரம் வாகன ஓட்டிகள் தவித்தபடியே செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. அந்தேரி சுரங்கப்பாதை முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியது. ரயில், விமானச் சேவைகளும் மழை, வெள்ள பாதிப்பில் இருந்து தப்பவில்லை.
வரலாறு காணாத மழையை எதிர்கொள்வதால், மும்பை நகரம் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. ராய்காட், ரத்னகிரி, சத்தாரா, கோல்ஹாபுர், புனே எனப் பல நகரங்களுக்கும் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இயற்கை அன்னையின் கோரத் தாண்டவத்தால் இதுவரை 6 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் யாரும் அவசியம் இன்றி எங்கும் பயணிக்க வேண்டாம், பாதுகாப்பாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
அடுத்த 2 நாட்களும் ஆபத்தான காலக்கட்டம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் கண்காணிப்பு, மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் முழுவீச்சில் இறங்கியுள்ளது மகாராஷ்டிரா அரசு.