மதுரை மாநகராட்சியில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை முறையான பராமரிப்பின்றி சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவருகிறது. மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடையை முறையாகப் பராமரிக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை மாநகராட்சி நிர்வாகத்தின் மூலம் தமுக்கம் மைதானம் மற்றும் அரசு ராஜாஜி மருத்துவமனை பகுதிகளில் குளிரூட்டப்பட்ட மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியுடன் கூடிய பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டது. பொதுமக்கள் மற்றும் பயணிகளின் வசதிக்காக அமைக்கப்பட்ட இந்த நிழற்குடை முறையான பராமரிப்பின்றி சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவருவதாகப் புகார் எழுந்துள்ளது.
பயணியர் நிழற்குடையில் அமைக்கப்பட்ட குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் அலுமினிய ஜன்னல் கதவுகளை அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் திருடிச் சென்றுள்ளனர். பயணிகளுக்காக அமைக்கப்பட்ட இருக்கைகள் சேதமடைந்த நிலையில் இருப்பதோடு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீரையும் பயணிகள் பயன்படுத்த முடியாத அளவிற்கு அசுத்தமாகக் காட்சியளிக்கிறது. அரசு மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் பயன்படுத்தும் இந்த பயணியர் நிழற்குடை முறையாகப் பராமரிக்கப்படாததால் குப்பை மேடாகக் காட்சியளிக்கிறது.
பயணியர் நிழற்குடையை முறையாகப் பராமரிக்க வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையை அலட்சியமாக எதிர்கொண்ட மாநகராட்சி நிர்வாகத்தால், இரவு நேரங்களில் சமூக விரோதிகள் மது அருந்தும் மதுபானக் கூடமாக இந்த பயணியர் நிழற்குடைகள் மாறியுள்ளன. மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடை மக்களுக்கு எந்த பயனும் இல்லாத நிலையில் காட்சியளிப்பதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்
நாள்தோறும் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு சேதமடைந்த நிலையில் காட்சியளிக்கும் பயணியர் நிழற்குடையை உடனடியாக சீரமைப்பதோடு, அதனை முறையாகப் பராமரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.