சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது.
தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அதன்படி, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வள்ளுவர்கோட்டம், கோயம்பேடு, அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
மேலும், வில்லிவாக்கம், அயனாவரம், பாடி கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. இதன் காரணமாக. வெயிலின் தாக்கம் சற்று குறைந்துள்ளது.
சென்னையில் அதிகபட்சமாக துரைப்பாக்கத்தில் நேற்று ஒரே நாளில் 195 புள்ளி 3 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அடுத்தபடியாக பள்ளிக்கரணையில் 177 மில்லி மீட்டர் மழையும், மேடவாக்கத்தில் 171 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளன. அதே வேளையில் குறைந்தபட்சமாக முகலிவாக்கத்தில் 15 புள்ளி 6 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு, செங்காடு, அனக்காவூர், வெண்பாக்கம், மாங்கால்கூட்டு சாலை ஆகிய பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், கடந்த சில நாட்களாக வாட்டி வதைத்து வந்த வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.