இளைஞர்களின் வேலைகளைப் பறித்து, பெண்களை சித்ரவதை செய்யும் ஊடுருவல்காரர்களை இந்தியாவில் தங்க அனுமதிக்க மாட்டோம் என பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
பீகார் பயணத்தை நிறைவு செய்துவிட்டு மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தா சென்ற பிரதமர் மோடி, புதிய மெட்ரோ ரயில் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
நோபரா – ஜெய்ஹிந்த் பிமன்பந்தர், சீல்டா– எஸ்பிளனேட் உட்பட 3 மெட்ரோ ரயில் திட்டங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து மெட்ரோ ரயிலில் பயணம் செய்த பிரதமர் மோடி, மெட்ரோ திட்டங்களில் ஈடுபட்ட கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
இதையடுத்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி,
மேற்குவங்கத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசு அனுப்பும் பணம் கொள்ளை அடிக்கப்பட்டு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினருக்கு செலவிடப்படுவதாக குற்றம்சாட்டினார்.
மேற்குவங்கம் வளர்ச்சி அடையும் வரை விக்சித் பாரத் என்ற பயணம் வெற்றி பெறாது என தெரிவித்த அவர், மத்திய அரசு திட்டங்களின் பலன்கள் மக்களைச் சென்றடைவதை உறுதி செய்ய பாஜகவைத் தேர்ந்தெடுப்பது அவசியம் எனவும் கூறினார்.
குற்றமும், ஊழலும் திரிணாமுல் காங்கிரஸ் அரசின் அடையாளமாகி விட்டதாகவும் ஆட்சியில் இருந்து திரிணாமுல் காங்கிரசை அகற்றும் போதுதான் உண்மையான மாற்றம் வரும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
இளைஞர்களின் வேலைகளைப் பறித்து, பெண்களை சித்ரவதை செய்யும் ஊடுருவல்காரர்களை இந்தியாவில் தங்க அனுமதிக்க மாட்டோம் எனவும் அவர் உறுதியளித்தார்.