ரஷ்யாவுடனான போரில் உயிரிழந்த 6000 ராணுவ வீரர்கள் உடல்கள் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை அடையாளம் காணும் பணி தொடங்கியுள்ளது. எனினும் பலரது உடல்கள் மோசமாக இருப்பதால் அடையாளம் காணும் பணியில் சிக்கல் நீடித்து வருகிறது.
ரஷ்யா- உக்ரைன் இடையே மூன்று ஆண்டுகளை கடந்தும் போர் நீடித்து வரும் நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்க, அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் முயன்று வருகின்றன. அண்மையில் நடந்த பேச்சுவார்த்தையில், உக்ரைன் ரஷ்யா போரில் உயிரிழந்த இருநாடுகளை சேர்ந்த 6,000 வீரர்களின் உடல்களை பரிமாறி கொள்ள பரஸ்பரம் சம்மதம் தெரிவித்தன.
அதன் அடிப்படையில் போரில் உயிர்நீத்த 6000 உக்ரைன் வீரர்களின் உடல்களை ரஷ்யா அனுப்பி வைத்துள்ளது. தெற்கு உக்ரைன் பகுதியில் உள்ள துறைமுக நகரமான ஒடேசா ரயில் நிலையத்தில் 6000 உக்ரைன் வீரர்களின் உடல்கள் வைக்கப்பட்டுள்ளன.
சிதைந்த நிலையிலும், சேறுபடிந்த நிலையிலும் உக்ரேனிய வீரர்களின் உடல்கள் இருக்கின்றன. ஏற்கனவே உடற்கூராய்வு சோதனை கூடங்கள் உடல்களால் நிரம்பியிருக்கும் நிலையில், அதற்கு மாற்றாக கன்வேயர் பெல்ட் போன்ற செயல்பாட்டில் வீரர்களின் உடல்கள் விரைவாக அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது.
கடுமையான கோடை வெப்பத்தைத் தாங்கும் கூடாரத்தின் கீழ் 6 பேர் கொண்ட குழுவினர் உடல்களை அடையாளம் காணும் பணியை மேற்கொள்கின்றன. ஒவ்வொரு குழுவிலும், புலனாய்வு அதிகாரி, தடயவியல் தொழில்நுட்ப வல்லுநர், நோயியல் நிபுணர், உளவுத்துறை அதிகாரி, துப்புரவு பணியார் ஆகியோர் இடம் பெற்றிருக்கின்றனர்.
ஒரு நிலையத்தில் இருந்து மற்றொரு நிலையத்திற்கு அரைமணி நேர இடைவெளியில் ஒவ்வொரு உடலும் நகர்த்தப்படுகின்றன. இறந்த வீரர்களின் உடல்களில் வெடிபொருட்கள், ஆவணங்கள் அல்லது வேறு ஏதேனும் உள்ளதா என்று சரிபார்க்கப்பட்டு, பின்னர் டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
ஒவ்வொரு உடலுக்கும் தனித்துவமான 17 இலக்க அடையாள எண் ஒதுக்கப்படுகிறது, அதில் வருகை, தேதி, பெறும் நிறுவனம் மற்றும் ஒரு தனிப்பட்ட வரிசை குறியீடு இடம்பெற்றிருக்கும். உடல்களில் ஆவணங்கள், டேக்குகள், நகைகள் அல்லது கிழிந்த உடைகள், உடல் பாகங்கள் இருந்தால், அவை தொழில்நுட்ப வல்லுநரால் புகைப்படம் எடுக்கப்பட்டு, தனித்தனி பைகளில் வைக்கப்படும்.
போரில் ராணுவத்தினர், பொதுமக்கள் என 70 ஆயிரம் பேர் காணாமல் போனதாக வகைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், உடல்கள் மோசமாக உள்ளதால், அவற்றை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது,
அடையாளம் காணும் செயல்முறை ஓர் ஆண்டுக்கு மேல் நீடிக்கலாம் என்றும், சில சமயங்களில், ஒரு உடல் பையில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களின் எச்சங்கள் இருக்கும் என்றும், இது அடையாளம் காணும் பணியை இன்னும் சிக்கலாக்கும் என்றும் உக்ரைன் வெளியுறவுத்துறை கூறியுள்ளது.