வல்லரசு நாடுகளுக்கு இணையாக விண்வெளியில் ஆய்வு மையத்தை நிறுவும் திட்டத்தின் இறுதி கட்டத்தை இந்தியா எட்டியுள்ளது. இது குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
அண்மையில் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்று திரும்பினார். இதன் மூலம் அங்கு சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றார். சுக்லா சென்று வந்த அந்த விண்வெளி ஆய்வு மையம், அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் ஒன்றிணைந்து உருவாக்கியது.
இதுவரை அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய 3 நாடுகள் மட்டும்தான் தங்களுக்கென தனியாக விண்வெளி ஆய்வு யைமத்தை கொண்டுள்ளன.
இந்தியாவுக்கென்று இதுவரை தனியாக விண்வெளி ஆய்வு மையம் இல்லை. அதனை கட்டமைக்கும் முயற்சியில் இந்தியா தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
விண்வெளியில் இந்தியா உருவாக்கவுள்ள ஆய்வு மையம் மிகப்பெரியது. இதில் தங்கியபடி, இந்திய விண்வெளி வீரர்களும், விஞ்ஞானிகளும் விண்வெளியை துல்லியமாக ஆய்வு செய்ய முடியும். இந்நிலையில், விண்வெளியில் இந்தியா அமைக்கவுள்ள அந்த ஆய்வு மையத்தின் மாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
தேசிய விண்வெளி தினத்தையொட்டி, டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் 2 நாட்களுக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அப்போது, விண்வெளியில் அமைக்கவுள்ள ஆய்வு மையத்தின் மாதிரியை இஸ்ரோ காட்சிப்படுத்தியது.
சர்வதேச விண்வெளி மையத்தை 5 தனித்தனி பகுதிகளாக தயாரித்து, அவற்றை பூமியில் இருந்து விண்ணுக்கு செலுத்தி ஒன்றிணைக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இந்த 5 பகுதிகளும் 52 ஆயிரம் டன்களுக்கும் அதிகமான எடையை கொண்டிருக்கும்.
இவை அனைத்தும் 2028ம் ஆண்டு முதல் 2035ம் ஆண்டுக்குள் LVM3 ராக்கெட் உதவியுடன் விண்ணுக்கு கொண்டு செல்லப்பட்டு ஆய்வு மையம் கட்டமைக்கப்படவுள்ளது. இந்தியாவின் ஆய்வு மையம் பூமியில் இருந்து 450 கிலோமீட்டர் தொலைவில் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு மையம், விண்வெளி குறித்த ஆய்வுக்கு மட்டுமல்லாமல், விண்வெளி சுற்றுலாவை ஊக்கவிக்கவும் உதவும் என கருதப்படுகிறது. அதன்மூலம் விண்வெளி துறை சார்ந்த வர்த்தகங்களிலும் இந்தியாவால் ஈடுபட முடியும் என கூறப்படுகிறது.